பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/465

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

463

ஏமாந்துவிட்டதைத் துரியோதனன் உணர்ந்து கொண்டான். கவசம் உடைந்து விழுந்ததோ இல்லையோ, துரியோதன னுடைய மனத்தில் பயம் பிடித்துக் கொண்டது. இனி நாம் இங்கே நின்றால் அர்ச்சுனன் நம்மை என்ன செய்வானோ என்று பயந்து அங்கிருந்தே ஓடிவிட்டான் அவன். அவனோடு நின்ற மற்றவர்களும் அதுபோலவே அவனைப் பின்பற்றி ஓடிவிட்டார்கள். இங்கு இவர்கள் நிலை இவ்வாறிருக்கப் போர்க்களத்தின் வேறோர் பகுதியிலிருந்த தருமன் கண்ணன் ஊதிய சங்கின் ஒலியைக் கேட்டு என்னவோ, ஏதோ, என்று பயந்து போய்விட்டான். “அர்ச்சுனனுக்கு ஏதோ பெரிய துன்பம் ஏற்பட்டிருக்கிறது போலும். அதனால்தான் கண்ணன் இப்படிச் சங்கு முழக்கி அதை நமக்கு அறிவிக்கிறான்” என்று அனுமானித்துக் கொண்டான். தன் பக்கத்திலிருந்த ‘சாத்தகி’, என்பவனை அழைத்து, “அர்ச்சுனனுக்கு என்ன துன்பமோ தெரியவில்லை. கண்ணன் சங்கு ஊதுகின்றான். நீ போய்ப் படைகளோடு அவனுக்கு உதவி செய்” என்று அனுப்பினான் தருமன். “அப்படியெல்லாம் அர்ச்சுனனுக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. நீங்கள் வீணாகப் பயப்படாதீர்கள்” என்று அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான் சாத்தகி.

அர்ச்சுனன் இருக்கும் இடத்தை அடைவதற்குள் போகிற வழியில் பலரை எதிர்த்து வெல்ல நேர்ந்தது. கிருதவர்மன், சலசந்தன் முதலியவர்களை வெற்றி கொண்டு சாத்தகி மேலே சென்றான். துரியோதனனுடைய தம்பிமார்கள் நான்கு பேர் அவனை எதிர்த்து வழி மறித்துக் கொண்டு போர் செய்தனர். அவர்களைத் தோற்கச் செய்து விரட்டியபின் துரோணர் பெரும் படைகளுடனே வந்து சாத்தகியை வழிமறித்துக் கொண்டார். துரோணர் அந்தணர். சாத்தகி க்ஷத்திரியன். “துரோணரே! நீர் வேதியர் குலத்தைச் சேர்ந்தவர். உம்மோடு போர் புரியும் தகுதி எனக்கு இல்லை. ஆகவே எனக்கு வழியை விட்டுவிடும்” என்று அவருடன் போர் செய்ய மறுத்தான் சாத்தகி. “அதெல்லாம் இல்லை. இப்போது