பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/488

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கர்ண பருவம்

1. கர்ணன் தலைமையில்

யானைமேல் வீற்றிருந்தபடியே காசியரசன் வீமனையும், வீமன் காசியரசனையும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். வீமன் வில்லை வளைத்து அம்புகளை ஏவினான். காசியரசனால் அம்புகளைத் தடுக்க முடியவில்லை. வீமன் மேல் கோபம் கொண்ட அவன் ஒரு வேலாயுதத்தை எடுத்து வீமன் மேல் எறிந்தான். ஆனால் வீமனோ அந்த வேலையும் தன் அம்புகளால் முறித்துக் கீழே தள்ளி விட்டான். தன் வேல் முறிவதைக் கண்டு திகைத்த காசியரசன் அடுத்து வீமனுடைய அம்புகள் தன் யானையின் உடலில் தைப்பதையும் கண்டான். வீமனுடைய அம்புகளால் காசியரசனின் யானை உடலெங்கும் அம்புதுளைக்கப் பெற்று வலிதாங்க முடியாமல் அலறிக்கொண்டே கீழே விழுந்தது. காசியரசன் யானையிலிருந்து கீழே குதித்து ஒரு வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு வீமனை எதிர்த்தான். உடனே வீமனும் தன் யானையிலிருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு காசியரசனை, எதிர்த்துப் போர் புரிந்தான். வீமனுடைய கதாயுதம் காசியரசனைப் புடைத்த போதெல்லாம் அவன் மிரண்டு அலறினான். அவன் வஜ்ராயுதம் வீமனை ஒரு முறைகூடத் தாக்க முடியவில்லை. இறுதியில் வீமன் தன் கதாயுதத்தினாலேயே காசியரசனை அடித்துக் கொன்றான். காசியரசன் போர்க்களத்தில் இறந்து விழுந்ததும் அவனுடைய படைகள் சிதறி ஓடிவிட்டன. அதைப் பார்த்த படைத் தலைவனாகிய கர்ணன் அப்படைகளுக்கு ஆறுதல் கூறி அவைகளை மீண்டும் ஒன்று திரட்டிப் போருக்கு அனுப்பினான். மீண்டும் போர்க்களத்தில் முறையான போர் ஆரம்பித்து நடந்தது. இரு திறத்தாரும் உயிரைத் துச்சமாக மதித்துப் போர் இட்டனர். கர்ணனுக்கும் நகுல சகாதேவர்களுக்கும் நேரடிப்போர் நடந்தது. நகுலன்