பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/493

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

491

பொழுது வெறும் பொழுதாக விடியவில்லை. ஆத்திரம் நிறைந்த பொழுதாக விடிந்தது. முதல் நாள் அடைந்த தோல்வியை எண்ணிக் கொதிக்கும் உள்ளத்தோடு மறுநாள் போருக்குத் தயாரானார்கள் கௌரவர்கள். பாண்டவர்களோ, அன்றையப் போரிலும் வெற்றியைத் தாங்களே அடைய வேண்டுமென்று ஆர்வத்தோடு புறப்பட்டிருந்தார்கள். கர்ணன் அன்று போருக்குப் புறப்பட்ட போது மிக அற்புதமான அலங்காரத்துடன் கண்ணைக் கவரும் விதத்தில் காட்சியளித்தான். நிர்மலமான ஒளிநிறைந்த அவன் முகம் காண்போரைக் காந்தம் போலக் கவர்ந்து இழுத்தது. அணையப் போகிற தீபம் சுடர்குதித்து எரிகின்ற மாதிரி விளங்கிற்று அந்த அழகு. அன்று அந்தப் பதினேழாவது நாள் அவனுடைய வாழ்வை நிர்ணயிக்க வேண்டிய நாள். மனத்தினுள் அன்று காரணம் புரியாத ஒருவிதக் கலக்கம் அவனை வதைத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு முடிவினால் எங்கோ ஓர் இடத்திற்குப் போகப் போவது போன்ற கலக்கம். அது தானாகவே அவனைப் பீடித்தது. அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தன் அறிவையெல்லாம் ஒன்று திரட்ட முயன்றான் அவன். முடியவில்லை. தயங்கும் உள்ளமும் தயங்காத கால்களுமாக அவன் பதினேழாவது நாள் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டான்.

துரியோதனனுடைய மனத்தில் கர்ணனுக்கு ஏற்பட்டிருந்ததைப் போலக் கலக்கம் எதுவும் ஏற்படாவிட்டாலும் போரில் யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி என்று உடனே தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைந்திருந்தது. இந்த மாபெரும் போரில் எத்தனையோ பல உறவினர்களைக் கொன்றான். அதே போலப் பாண்டவர்கள் வில்லுக்குப் பலரைப் பலிகொடுக்கவும் செய்தான். இவ்வளவும் செய்த பின்னும் வெற்றி இதுவரை அவனுக்குக் கிட்டவில்லை. இது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்தது அவனுக்கு. துரியோதனன் கர்ணன், இவர்கள் இருவர் மனத்தில்