பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/507

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

505

கர்ணன். அவனுடைய ஆவேசத்தைக் கண்டு வீமனே பயந்து போய்விட்டான். வீமனும் அவனுடைய படைகளும் போர்க்களத்திலிருந்து கர்ணனுக்கு எதிர் நிற்க முடியாமல் தறிகெட்டு ஓடத்தலைப்பட்டனர். கர்ணன் ஓடுகிறவர்களைத் துரத்த முற்படுவதற்குள் அர்ச்சுனன் படைகளோடு வந்து அவனை வழி மறித்துக் கொண்டான். இருவருக்கும் போர் ஏற்பட்டது. கர்ணன் படையிலும், அர்ச்சுனன் படையிலும், அவரவர்களுக்குத் துணையாகச் சில சிற்றரசர்களும் வந்திருந்தனர். எல்லோருமே வில்யுத்தத்தில் வல்லவர்களாக இருந்ததனால் இருதரப்புப் படைகளுக்கும் இடையே விற்போர் தொடங்கிற்று. கர்ணன் படையினரும் அர்ச்சுனன் படையினரும் எய்து கொண்ட அம்புகள் வான்வெளி யெங்கும் நீக்கமற நிறைந்து ஒரே அம்பு மயமாகக் காட்சியளித்தது. இவர்கள் இருவருக்கும் இந்த மாதிரிப் போர் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அசுவத்தாமன் தன் படைகளோடு தானும் வந்து கர்ணன் பக்கத்தில் சேர்ந்து கொண்டான்.

‘அர்ச்சுனனுடைய சரீரத்தையே அம்புகளால் மூடிவிடுவேன்’ என்பது போல் ஒரே அசுர வேகத்தில் அசுவத்தாமன் அம்புகளைப் பொழிந்தான். அசுவத்தாமனுடைய தாக்குதலால் தளர்ச்சியடைந்த அர்ச்சுனன் திகைத்து நின்று விட்டான்!

உடனே கண்ணன், “அர்ச்சுனா! இந்த அருமையான சமயத்தில் தளர்ந்துவிடாதே மனத்தைத் திடப்படுத்திக்கொள். அசுவத்தாமனை எதிலும் சாதாரணமானவனாக நினைத்து விட்டுவிடாதே! இது சரியான சமயம் அர்த்த சந்திர வடிவான அம்பு ஒன்றை எடு. அவன் மார்பைக் குறிவைத்து அதைச் செலுத்து” என்று அர்ச்சுனனைத் தேற்றினான்.

கண்ணனுடைய ஊக்கம் மிகுந்த சொற்களால் தெளிவு பெற்ற அர்ச்சுனன் பிறைச் சந்திரனைப் போன்ற உருவத்தில் அமைந்த அம்பு ஒன்றை எடுத்து அசுவத்தாமன்மேல் அதைத்