பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/514

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

512

அறத்தின் குரல்

னுடைய தலையை அறுத்துக் கீழே தள்ளிவிட்டது. நட்ட நடுவில் களத்தின் இடையே திடீரென்று தலையறுந்து வந்து விழுந்ததைக் கண்ட படைகள் திடுக்கிட்டு மயங்கின. அவர்கள் ஓடிப் போய்க் கர்ணனிடம் முறையிட்டார்கள். கர்ணன், தலை கிடந்த இடத்தில் வந்து பார்த்தபோது அது தன்னுடைய மகன் தலையாக இருந்ததைக் கண்டு அலறிக் கண்ணீர் சிந்தினான்.

அந்தத் துன்பம் நிறைந்த சூழ்நிலையில் தேர்ப் பாகனாகிய சல்லியன் தன்னுடைய சொந்தப் பகையையும் மறந்து கர்ணனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினான். போர் மீண்டும் தொடங்கியது. தொலைவிலிருந்து போரில் கலந்து கொள்ளாமல் போர்க்களத்தையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த அசுவத்தாமனுடைய மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் உண்டாயின. துச்சாதனன், விடசேனன் ஆகியோர் வரிசை வரிசையாக இறந்து வருவது மனத்தைக் கலக்கியது. ‘அளவற்ற உயிர்களைக் கொன்று குருதியை ஓடவிடும் இந்தப் பயங்கரமான போர் இன்னுமா நிகழ வேண்டும்? போரை நிறுத்திவிட்டுப் பாண்டவர்களும், கௌரவர்களும் சமாதானமாகப் போனால் என்ன?’ - என்று அசுவத்தாமன் தனக்குள் எண்ணினான். உடனே அவன் உள்ளத்தில் இன்னும் என்னென்ன எண்ணங்கள் உண்டாயினவோ, தெரியவில்லை. திடீரென்று துரியோதனனைச் சந்திப்பதற்காக அசுவத்தாமன் அவன் இருப்பிடம் சென்றான். அவன் துரியோதனனைக் கண்டதும் சாந்தம் தவழும் குரலில் கூறலானான்:- “துரியோதனா! இந்தப் போரினால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பார்த்தாயா? எத்தனை, எத்தனை உயிர்கள் மடிந்தன்! உறவினரும் நண்பரும் துன்பமுறும்படி இனியும் இந்தப் போரை எதற்காகச் செய்யவேண்டும்? உன் பக்கமும் நிறையச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. பாண்டவர் பக்கமும் நிறையச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை நடந்ததை மறந்து விடுங்கள். இனி நடக்கப் போவதை நினையுங்கள்.