பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/530

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

528

அறத்தின் குரல்

எஞ்சியிருந்தவர்களில் சல்லியனைக் காட்டிலும் தகுதி வாய்ந்தவர்கள் வேறு எவரும் இல்லை. அவன் ஒருவனால் தான் இனிமேல் அவ்வளவு பெரிய கெளரவ சேனையை நிர்வகித்து நடத்த முடியும். இத்தகைய காரணங்களாலேயே துரியோதனன், சகுனி இருவரும் சல்லியனைத் தேர்ந்தெடுத்தனர். உறக்கமில்லாத அந்த நீண்ட துயர இரவு கழிந்ததும் பதினெட்டாம் நாள் பொழுது புலர்ந்தது. துரியோதனன் போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை வேண்டா வெறுப்பாகச் செய்தான். சல்லியனை அழைத்து, சல்லியா! இன்றைய படைத் தலைவன் நீ தான். என்னுடைய படைகளை உன்னை நம்பி ஒப்படைக்கிறேன். இனி என்னுடைய உயிர், உடல், வாழ்வு, துணிவு, வெற்றி, நம்பிக்கை எல்லாம் உன் வசத்தில்தான் இருக்கின்றன. என்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் பொறுப்பை - வெற்றி, தோல்வியை முடிவு செய்யவேண்டிய சோதனையைத் துணிந்து உன் கையில் கொடுக்கிறேன். யானை, தேர், குதிரை, காலாள் என்ற எனது நான்கு வகைப் படைகளுக்கும் இந்த விநாடியிலிருந்து நீயே தளபதி. இதோ அதற்குரிய அடையாள மரியாதைப் பொற்பட்டத்தை உனக்கு அணிவிக்கிறேன். ஏற்றுக்கொள்” என்று சல்லியனிடம் உருக்கமாகக் கூறித் தளபதிப் பதவியை அளித்தான். சல்லியன் மகிழ்ச்சியோடும் பயபக்தியோடும் தனக்களிக்கப்பட்ட சேனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டான். துரியோதன்னுடைய படைகளுக்கு நடுவே கம்பீரமான பட்டத்து யானை மேல் ஏறி உட்கார்ந்து அணிவகுப்புக்காக வீரர்களை ஒழுங்குபடுத்தினான் சல்லியன். துரியோதனனின் படை வீரர்கள் சல்லியனுடைய தலைமையை மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்து வரவேற்றனர். சல்லியன் அன்றைய போருக்கு ஏற்றபடி வீரர்களைத் தனித்தனிப் பிரிவாக அணிவகுத்து நிறுத்தினான். துரியோதனனுக்குப் போர்க்களத்திற்கு வரவேண்டுமென்ற ஆசையோ, ஆர்வமோ அன்று இல்லாவிட்டாலும் கடமைக்காக வரவேண்டியிருந்தது. பதினெட்டாம் நாள்