பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/547

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

545

என்னோடு யுத்தம் செய்ய வாருங்கள்” - என்று அழைத்தான் துரியோதனன்.

உடனே கண்ணன் துரியோதனனை நோக்கி மறுமொழி கூறலானான் :- “பயப்படாதே! நாங்கள் எல்லோரும் உன்னோடு போர் செய்து உன்னைத் துன்புறுத்தி விடமாட்டோம். உன்னை எதிர்ப்பதற்கும் அழிப்பதற்கும் பிறந்தவன் ஒரே ஒருவன்தான் இருக்கிறான். அவன் தான் வீமன். அந்த வீமன் உன்னைக் கொல்வதாகச் சபதம் செய்திருப்பதை நீ மறந்திருக்க மாட்டாய். ஆகவே நீயும் வீமனும் இப்போது போர் புரியுங்கள். உங்களில் யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ அவர்கள் இந்தப் பரந்த தேசத்தையும் இதன் ஆட்சி உரிமையையும் சொந்தமாகப் பெறலாம்.”

கண்ணனுடைய நிபந்தனைக்குத் துரியோதனன் இணங்கினான். வீமனை வென்று மண்ணையும் மண்ணாளும் உரிமையையும் பெற்றுவிட வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தது.

வீமன், துரியோதனன் இருவரும் தங்களுக்குள் கதாயுதத்தால் போர் செய்வது என்று தீர்மானமாயிற்று. போரை எந்த இடத்தில் நடத்துவது என்ற பிரச்னை ஏற்பட்டது. இருவருக்குள் நடக்கும் போரானாலும் அதற்கு வசதியும் தகுதியும் நிறைந்த இடம் வேண்டுமல்லவா? ஏற்ற இடம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லுமாறு எல்லோரும் சேர்ந்து கண்ணபிரானை வேண்டிக் கொண்டார்கள்.

இவர்கள் ஆலமரத்தடிக் குளக்கரையில் நின்று இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது பல நாட்களாக யாத்திரை போய்ச் சுற்றிவிட்டு வந்திருந்த விதுரனும் பலராமனும் அந்தப் பாதையில் வந்தார்கள். பாண்டவர்களும் விதுரனும் ஆச்சயரித்தோடும், எதிர்பாராத சந்திப்பால் ஏற்பட்ட மகிழ்ச்சியோடும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். தீர்த்த யாத்திரை சென்ற இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விதுரனும் பலராமனும்

அ. கு. - 35