பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/558

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

556

அறத்தின் குரல்

இரவோடிரவாகப் பாண்டவர்களின் பாசறையில் திருட்டுத்தனமாய் நுழைந்து அவர்கள் ஐந்து பேரையும் ‘கொலை செய்து விடுவது’ என்று திட்டம் உருவாயிற்று. பாண்டவர்கள் பாசறையில்தான் தங்கியிருக்கிறார்களா? அல்லது வேறெங்காவது போய்த் தங்கியிருக்கிறார்களா? என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை.

அசுவத்தாமன், கிருதவர்மன், கிருபாச்சாரியன் ஆகிய மூவரும் ஆயுதபாணிகளாக இருளில் பதுங்கிப் பதுங்கி மறைந்து மறைந்து பாண்டவர்கள் பாசறை வாசலை அடைந்தனர்.

பாசறைக்கு இம்மாதிரி ஆபத்துக்கள் நேரலாம் என்பதை முன்பே எதிர்பார்த்திருந்த கண்ணன் மாயையினால் உருவாக்கப்பட்ட பயங்கரமான பூதம் ஒன்றைப் பாசறை வாயிலில் காவலாக நிறுத்தி வைத்திருந்தான். இப்படி ஒரு பூதம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விஷயமும் அசுவத்தாமன் முதலியோருக்குத் தெரியாது. அவர்கள் மூவரும் பாசறை வாயிலை அடைந்தபோது பூதம் குபீரென்று பாய்ந்து பிடித்துக்கொண்டது. ‘ஐயோ! அப்பா! பூதம்! பூதம்!’ என்று அவர்கள் அலறினார்கள். அவர்கள் அலறலைப் பொருட்படுத்தாமல் நையப் புடைந்து விரட்டியது பூதம். கிருதவன்மாவும், கிருபாச்சாரியனும், பூதத்தினிடமிருந்து தப்பித்தால் போதும் என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போய்விட்டனர். அசுவத்தாமன் பூதத்தை எதிர்க்க முயன்றான். அதன் விளைவாகப் பூதம் தன் கை வரிசையை அவனிடம் மிகுதியாகக் காட்டி வெளுத்து விட்டது. இனியும் இந்தப் பூதத்தினிடம் அகப்பட்டுக் கொண்டால் இது நம்மைக் கொன்றே போட்டுவிடும்’ என்று பயந்து ஓடினான் அவன். பாண்டவர்களின் பாசறை வாயிலில் பிடித்த ஓட்டம் தன் பாசறை வாசலில் இருந்த ஆல மரத்தடியில் வந்துதான் நின்றது. மூச்சு இரைத்தது. சோர்ந்துபோய் அப்படியே அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.