பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/568

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

566

அறத்தின் குரல்

திரும்பி விடமாட்டார்கள். மனத்தைத் தேற்றிக் கொண்டு அமைதி அடைய வேண்டும்” - என்றான் கண்ணன். இதன் பின் எல்லோரும் அத்தினாபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

திருதராட்டிரன் சஞ்சயன் கூறிய ஆறுதல் உரைகளால் மனந்தேறியிருந்தானாயினும் தன் மகனைக் கொன்ற வீமனை எப்படியும் பழிக்குப்பழி வாங்கிவிட வேண்டும் என்ற ஆத்திரம் அவன் உள்ளத்தில் நிறைந்திருந்தது. துரியோதனன் ஒருவனை மட்டுமின்றித் தன் புதல்வர்கள் நூறு பேரையும் வீமன் ஒருவனே கொன்றிருந்தான் என்று அறிந்து வீமன் மேல் கொதிப்படைந்திருந்தது திருதராட்டிரன் உள்ளம்.

கண்ணனும் பாண்டவர்களும் அத்தினாபுரத்து அரண்மனை வாயிலை அடைந்து தாங்கள் வந்திருக்கும் செய்தியைத் துரியோதனனுடைய தந்தைக்குச் சொல்லியனுப்பினர்.

திருதராட்டிரன் அவர்களை மிகுந்த அன்போடும், பாசத்தோடும் வரவேற்பவன் போல் நடித்தான். ‘ஆகா பாண்டவர்களே நீங்கள் புண்ணிய சீலர்கள் போரில் வெற்றி பெற்று வந்திருக்கிறீர்கள். முன்னோர்கள் வீற்றிருந்து ஆண்ட இந்தச் சிம்மாசனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மகனை இழந்த துயரம் தாங்காமல் வருந்திக் கொண்டிருக்கும் நான் நீங்கள் வந்ததும் இராஜ்யத்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டுத் தவம் செய்வதற்காகக் காட்டிற்குப் போகலாமென்றிருக்கிறேன். உங்களைச் சந்தித்து வெகு நாட்களாயிற்றல்லவா? புதல்வர்களே! என் அருகில் வாருங்கள். உங்களை மார்புரத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது!” - என்று குழைந்த குரலில் வேண்டினான் அவன்.

இந்த வஞ்சக வேண்டுகோளின் அந்தரங்கத்தைக் கண்ணன் உடனே புரிந்து கொண்டான். “சரி! வீமனைத் தழுவிக் கொள்ளும்போது அப்படியே அவனை நொறுக்கிக்