பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/569

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

567

கொன்று விடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறான் இந்தக் குருட்டு மன்னன். வீமனை இவனிடம் அனுப்பக் கூடாது” - என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் அவன். தருமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் இவர்கள் நால்வரும் ஒவ்வொருவராகத் திருதராட்டிரனிடம் அருகிற் சென்று அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு திரும்பி வந்தனர். “எங்கே வீமன்? அவன் மட்டும் ஏன் வரவில்லை ?” என்று கத்தினான் திருதராட்டிரன். கண்ணன் ஒரு தந்திரம் செய்தான். ஏறக்குறைய வீமனின் உயரம், பருமன், ஆகிருதி எல்லாப் பொருத்தமும் உடையதாக அங்கிருந்த இரும்புத் தகட்டினாலான சிலை ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய்த் திருதராட்டிரனுக்கு அருகில் நிறுத்தினான். “இதோ வீமன் வந்து நிற்கிறான். தழுவிக் கொள்ளுங்கள்” - என்று கூறினான். உடனே திருதராட்டிரமன்னன் குபீரென்று பல்லை இறுக்கிக் கடித்துக் கொண்டு அந்தச் சிலையின் மேல் பாய்ந்து அதைத் தழுவிக் கொண்டு அழுத்தி நெரித்தான். இரும்புச் சிலை தூள் தூளாக உடைந்து விழுந்தது. வீமன் மேல் அவனுக்கிருந்த கோபம் இந்த நிகழ்ச்சியால் புலனாயிற்று. கண்ணனுடைய தந்திரமான ஏற்பாட்டால் வீமன் பிழைத்தான் ‘இரும்புச் சிலையை நிறுத்தித் தன்னை ஏமாற்றி விட்டார்கள்’ - என்று உணர்ந்தபோது திருதராட்டிரன் சபையில் அத்தனை பேருக்கும் நடுவில் வெட்கித் தலை குனிந்தான். சபையிலிருந்தவர்களெல்லோரும் அவன் வஞ்சத்தைக் கண்முன் கண்டு அருவருத்து வெறுப்புக் கொண்டனர். திருதராட்டிரன் அவமானம் தாங்க முடியாமல் தட்டுத் தடுமாறி வழியைத் தடவிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். பின் அங்கு திரும்பி வரவேயில்லை.

சில நாட்களுக்குப் பின்னர் ஒரு நல்ல நாள். உலகெலாம் அன்பும் அறமும் இன்பமும் பொங்கி வழியும் நாள் அது. அத்தினாபுரத்தின் சிம்மாசனத்தில் தர்மம் ஏறி ஆட்சி செலுத்தியது. பாண்டவர்களின் தமையனும் அறத்தின் நாயகனுமான தருமன் அந்தச் சிம்மாசனத்தின் மேல் அமர்ந்து