பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

55


நாட்டையடைந்து யாகசேனனைச் சந்திக்கச் சென்று அவன் முன் கூறிய சொற்களை நினைவுபடுத்தி என் வறுமை நிலையில் எனக்கு உதவுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவனோ என்னை அதற்கு முன்பு கண்டும் அறியாதவனைப் போல நீ யார்?’ என்று என்னையே கேட்டான். எனது மனம் அப்போது மிகுந்த வேதனையை அடைந்தது. நான் இளமையில் குருகுலவாசத்தின் போது நடந்ததிலிருந்து எங்களுடைய நட்பை நினைவுபடுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரித்துக் கூறினேன்.

ஆனால் அப்படிக் கூறியும் அவன், ‘நானோ நாடாளும் மன்னன். நீ சடை முடி தரித்த முனிவன். அவ்வாறிருக்க உனக்கும் எனக்கும் நட்பு எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும்? வீணாக ஏன் பொய்யைச் சொல்லுகின்றாய்? உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா என்ன?’ என்று என்னைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டே கேட்டான். எனக்கு அந்த நிலையில் அவன் மேல் அளவற்ற சினம் ஏற்பட்டுவிட்டது. ஏமாற்றத்தால் எனது மனம் குமுறிக் கொதித்தது. ‘ஞாபகமறதியால் நீயே அன்று கூறிய உறுதி மொழிகளையும் மறந்து என்னை இகழ்ந்து பேசுகிறாய். உன்னுடைய இந்தத் தகாத செயலுக்காக உன்னைப் போரில் சிறை செய்து உன் நாட்டில் ஒரு பகுதியை நானே எடுத்துக் கொள்வேன்! இது சபதம், அவசியம் நடக்கப் போகிறது பார்!’ என்று அவையறியக் கூறிச் சூளுரைத்தேன். “அதை நிறைவேற்ற வேண்டும்.” - துரோணர் இவ்வாறு தம் வாழ்க்கையையே பாதித்த பழைய நிகழ்ச்சியைக் கூறி முடித்தார். அரசகுமாரர்களாகிய பாண்டவர்களும் கெளரவர்களும் அவைக்கு அழைத்து வரப் பெற்றனர். குருவாக வந்திருக்கும் பெருந்தகையாளராகிய துரோணரைப் பணிந்து வணங்கினர்.

“துரோணரே! உம்மை அவமானப்படுத்திய யாக சேனனை வென்று அவனுக்கு அறிவு புகட்ட இவர்களே ஏற்றவர்கள், தாங்கள் இவர்களுக்குக் கற்பிக்கும் வித்தைகளால் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்!"