பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

71


கருத்தை அவர்களிடம் விவரித்தான், வேள்வி செய்து மக்களைப் பெற வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். முனிவர்கள் வேள்வி செய்ய இசைந்து ஏற்பாடுகளைச் செய்யலாயினர்.

வேள்விக்குக் குறித்த மங்கல் நாளிலே வேள்வி தொடங்கி நிகழ்ந்தது. மறையொலி எங்கும் முழங்கி எதிரொலித்தது. தெய்வத் தன்மை பொருந்திய மணம் கமழும் வேள்வி நிலையத்திலே பாஞ்சால நாட்டுப் பெரியோர்கள் குழுமியிருந்தனர். வேள்வியில் பயன்படுத்தி மிகுந்த வேள்வி அமிழ்தமாகிய பிரசாதத்தை யாகசேனன் மனைவிக்கு அளிக்கவேண்டியது முறை. ஆனால், வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்த போதே அவள் தீண்டாமை எய்தி விலக்காக இருக்கவேண்டியதாயிற்று. எனவே, வேள்விப் பிரசாதத்தை அவளுக்கு அளிக்க இயலவில்லை. என்ன செய்வதென்று செயல் விளங்காமல் திகைத்த யாகசேனன் இறுதியில் ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்தான். வேள்வியில் எஞ்சிய பிரசாதத்தை ‘இறைவன் விட்ட வழியில் முடியட்டும்’ என்றெண்ணிக் கொண்டு வேள்விக் குழியிலேயே இட்டான் அவன். வேள்விக் குழியில் அவன் நல்வினை விளக்கம் பெற்றது! கனவு நனவாகியது. தீயிலே பெய்த அமுதம் வீண் போகவில்லை. வேள்வியில் முதல்வரான உபயாச முனிவரின் மந்திர அருள் வலிமையினால் ஓமகுண்டத்தில் இட்ட பிரசாதம் உயிர் வடிவத்தை அடைந்தது. முதலில் ஓர் ஆண் மகன் அந்த வேள்வித் தீயிலிருந்து பிறந்து எழுந்தான். அவன் உடல் ஒளியும் அழகும் பெற்றுத் தோன்றியது. பொன்னொளிர் மேனியும் புன்னகை தவழும் நிலா முகமும் சுற்றியிருந்தோர்களைத் தன்பாற் கவர, வேள்விக் குழியிலிருந்து கிளம்பும்போதே தேரின் மீது நிற்கும் தோற்றத்துடனே கிளம்பினான் அம்மகன்.

சிரத்திலே மணிமுடி செவிகளிலே மகர குண்டலங்கள்! மார்பில் பொற் கவசம்! கரங்களில் வில்! - என்று இவ்வாறு தன் போக்கிலே வனத்தில் திரியும் சிங்கக் குரளையைப்