பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அறத்தின் குரல்

போகங்களும் உரிமைகளும் வேண்டுமென்று வற்புறுத்தினான் அல்லவா? அது திருதராட்டிரன் மனத்தைக் கலக்கமடையச் செய்திருந்தது. அவன் என்ன செய்வதென்று புரியாமல் மனம் மயங்கினான். திருதராட்டிரன், வீடுமன், விதுரன் முதலியோர்களை அழைத்து ஆலோசனை செய்தான். ‘தன் மக்களாகிய துரியோதனாதியர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடுவே அசூயை, பொறாமை, பகைமை. ஆகிய தீய உணர்வுகள் தோன்றியதனால் ஓற்றுமை குலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்பதை விளக்கினான். இந்த ஒற்றுமைக்குலைவைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்றும் அவர்களை வினவினான். “உறவு நெருக்கமாக இருந்தால் இவர்களுக்குள் பொறாமையும் பகைமையும் உண்டாவது இயற்கைதான். எனவே பாண்டவர்களும் ‘இவர்களும்’ தனித்தனியே விலகியிருந்து வாழுமாறு செய்து பார்ப்பது நல்லது. பிறந்ததிலிருந்தே ‘இவர்கள்’, ஐவர் மேல் அசூயை கொள்வது இயற்கையாகி விட்டதனால் நாம் அழைத்து அறிவுரை கூறினாலும் கேட்கமாட்டார்கள். இந்த ஒற்றுமைக் குலைவும் குரோதமும் உண்டாக்கப் போகின்ற தீய விளைவுகளை நுகர்ந்து துன்புற்றாலொழிய இவர்கள் திருந்தப் போவதும் இல்லை. எனவே இவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம்...” - என்று வீடுமன் முதலியோர் மனக் கசப்போடு கூறிவிட்டுச் சென்றனர்.

“மனம் என்பது விந்தையானது! போட்டி, பொறாமை, வஞ்சகம் முதலிய உணர்வுகள் புகமுடியாத நல்ல மனத்திலும் சூழ்நிலை காரணமாக அவை புகுந்து விடுவது உண்டு. பாதுகாப்பு நிறைந்த வீட்டிலும் அஜாக்கிரதையால் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டால் நாய்கள், திருடர்கள், நுழையும்படி நேர்ந்து விடுகிறதல்லவா? மனத்தின் அஜாக்கிரதையினால் இப்படிப்பட்ட தீய குணங்களும் இடம் பெற்று விடும். ‘தன் மக்களாகிய துரியோதனாதியர்களின் அசூயையும், பொறாமையும் தவறானவை’ என்று அஞ்சி மனம் பதறிப் பதைத்த திருதராட்டிரனது பண்புகூட