பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அறத்தின் குரல்

கொண்டான். “இந்த அரக்கு மாளிகையை தீக்கு இரையாக்கி உங்களை அழிக்க வேண்டும் என்பது அந்தச் சூழ்ச்சிக்காரர்களின் எண்ணம். இதை அறிந்த விதுரர் நான் இந்த மாளிகையை அமைக்கும்போதே, ‘பாண்டவர்கள் தப்பிச் செல்ல உள்ளே இரகசியமாக ஒரு சுரங்கம் அமைத்து விடு’ - என்று என்னிடம் கூறினார். நானும் அவ்வாறே ஒரு சுரங்கம் இங்கிருந்து காடுவரை போக வசதியாக அமைத்திருக்கிறேன். ஆபத்து ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - என்று கூறி அந்தச் சுரங்கம் ஒரு பெரிய தூணுக்கு அடியில் கீழே அமைந்திருப்பதையும் விளக்கிவிட்டுச் சென்றான். வீமன் அவனைப் பாராட்டி நன்றி செலுத்திப் பரிசு பல கொடுத்தனுப்பினான் அவனுக்கு.

இதன் பின் வெகு விரைவிலேயே ஒருநாள் வீமன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த விபத்து ஏற்பட்டது. ஆனாலும் அவன் முன்னேற்பாடுடனே தயாராக இருந்தான். அன்று பாண்டவர்கள் மிகுந்த நேரம் வனத்திலேயே வேட்டையாடி அலைந்த களைப்புடனே மாளிகைக்குத் திரும்பியிருந்தார்கள். அவர்கள் ஓய்வாக உறங்கப் போகும் நேரத்தில் புரோசனன் என்னும் அமைச்சன் வந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் வேறோர் புறத்தில் துரியோதனாதியர்களால் ஏவப்பட்ட ஐந்து வேடர்களும் அவர்கள் தாயாகிய வேட்டுவச்சி ஒருத்தியும் அந்த அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைப்பதற்காக ஒளிந்து கொண்டிருந்தார்கள். இது வீமனுக்கு மட்டும் முன்பே தெரியும். பேசிக் கொண்டே இருந்த மற்ற நால்வரும் அமைச்சன் புரோசனனையும் உறங்கச் சொல்லிவிட்டுத் தாங்களும் உறங்கி விட்டனர், நெருப்பு வைப்பதற்காக அனுப்பப்பட்டிருந்தவர்கள் எங்கே தங்கியிருந்தார்களோ, அங்கே முதலில் அவர்களை முந்திக் கொண்டு தானே நெருப்பை வைத்துவிட்டுத் தூண்டியிலிருந்த சுரங்கத்தைத் திறந்தான் வீமன், மாளிகையில் வேகமாகத் தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. அது தான்