பக்கம்:மக்கட் செல்வம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐம்புல நுகர்வு

107


சப்பாணி போன்ற பருவங்களெல்லாம் புற உறுப்புக்களின் வளர்ச்சியையும் அவற்றின் செயல்களையும் விளக்கிக் காட்டுவன அல்லவோ? எனவே இங்கே உனக்குப் புற உறுப்புக்களின் வளர்ச்சி மாற்றங்கள் பற்றி அதிகமாகக் காட்டாது, அகத்துறுப்புக்களின் அமைதியையும் மனவளர்ச்சியையும் மட்டும் ஓரளவு காட்ட நினைக்கின்றேன்.

அன்புள்ள அரசி!

உலகில் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் புறத்தோற்றத்தில் காட்டும் உருவமே உடம்பு எனப் பேசப்பெறுகின்றது. உயிர் உடலில் இல்லையானால் நிலை வேறுபடுகிறது. எனவே உயிர், உணர்வு போன்றவை உள்ள நிலைகள் காட்ட முடியாதனவாக அமைந்து நின்ற போதிலும் புறத் தோற்றத்தில் காணும் உடலே அவற்றை வளர்கின்றது என்னலாம். இதனால் தான் 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்' என்று திருமூலர் அறுதியிட்டார். ஆங்கிலத்திலும் உடலே நல் உள அமைப்புக்கு வழிகோலும் என்று அறிஞர்கள் காட்டுவர். எனவே குழந்தையின் புறத்தோற்ற நிலையினைக் கண்டே அக வளர்ச்சியை ஓரளவு அறிந்து கொள்ள முடியும். மனிதன் வளர்ந்த பிறகுதான் 'உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டும்' கலையில் வல்லவனாகி விடுகிறான். ஆனால் இளங்குழந்தைகள் நிலை அப்படியன்று. எனவே குழந்தையின் புற வளர்ச்சியின் தன்மை கொண்டே ஓரளவு உள்ளத்தை அறியலாம். அந்த உள்ள வளர்ச்சி பற்றியே இங்கு உனக்கு ஒருசில எழுதலாம் என நினைக்கின்றேன்.

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவும் ஐம்புல நிகழ்ச்சிகளும் குழந்தைகளுக்கு மெள்ள மெள்ள உருவாகுவனவேயாம். குழந்தை பிறக்கும் போது இந்தப் புலன்கள் அனைத்தையும் பெற்றேதான்