பக்கம்:மக்கட் செல்வம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

குழந்தையின்



பிறக்கின்றது. கண்ணும் காதும், வாயும் மூக்கும், காலும் கையும் பிறக்கும்போதே உடன் பிறக்கின்றவைதாம். எனினும் அவை தொழில்படுமுறை மெள்ள மெள்ள வளர்ந்து கொண்டே வருவதாகும். இந்த ஐம்புல நுகர்வின் வளர்ச்சியோடே மனவளர்ச்சியும் பெருகிக்கொண்டேதான் வரும். குழந்தைகளுடைய எத்தனையோ சொற்களுக்கு நம்மால் பொருள் காண முடியாது; அதுபோன்றே குழந்தைகளின் எத்தனையோ செயல்களுக்கும் நம்மால் உரை வகுக்கமுடியாது. என்றாலும் அவை எல்லாம் குழந்தை உணர்வு நிலையில் மெள்ள மெள்ள வளர்வதைக் காட்டுவனவேயாகும்.

இளங்குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள்ளாக ஒளியினை மெள்ள மெள்ள உணரத் தொடங்குகின்றன. பிறந்த உலகவெளியின் வெளிச்சத்தைக் காணக்கூசும் கண்கள் சில நாட்களில் ஒளியை விரும்பியே அகல விரிகின்றன. இருட்டில் உறங்கும் இளங்குழந்தை விளக்கொளி கண்டதும் அவ்வொளி தாங்காது விழித்துக் கொள்ளும். ஆனால், சில நாட்களில் அவ்வொளி தனக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை, சன்னல் வழியே ஒளிவருவது உணர்ந்து அந்தப் பக்கமே முகத்தைத் திரும்பிக்கொள்ளும் நிலையையில், நாம் காண்கின்றோம். எனினும் அப்பிஞ்சுக் குழந்தைகளுக்கு பல்வேறு வண்ணங்களை அக்காலத்தில் பிரிக்கும் திறன் இல்லை என்பது அறிஞர் கண்ட உண்மை.

வெண்மையையும் இருட்டையும் உணரும் குழந்தை நிறங்களைப் பகுத்து உணரச் சில நாட்கள் ஆகும். பிறந்த நாற்பத்து இரண்டாவது நாளிலே குழந்தை நிறங்களின் வேற்றுமைகளை உணரமுடியும். என்றாலும் ஒன்றரை ஆண்டு கழித்துப் பேசும் நிலையிலும் அவ்வண்ணங்களைப் பிரித்து இவை இன்னவண்ணத்தன என வகைப்படுத்த,