பக்கம்:மக்கட் செல்வம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

பிள்ளைப் பேறு வேண்டாவா?


இவ்வாறெல்லாம் எழுதுவதுபற்றிச் சிலர் என்னைக் குறைகூறவும்கூடும். என்றாலும் மனதில்பட்ட உண்மையை-உலகம் உள்ளளவும் வாழவேண்டிய உண்மையை-அன்று தொட்டு இன்று வரை அறிஞரும் அன்பரும் காட்டிவந்த உண்மையை நான் காட்டவில்லை என்றால் மனித சமூகத்துக்கே நான் துரோகம் இழைத்தவனாவேன் என்ற உணர்விலேயே இத்தனையும் உனக்கு எழுதுகிறேன்.

செல்வமாகிய குழந்தை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எத்தனே மகப்பெறினும் மனமிருந்தால் வைத்துக் காப்பாற்றலாம். தனி மனித னுக்கு முடியவில்லையானல் அரசாங்கம் அந்தப் பணியினைச் செய்யலாம். அப்படிச் சில அரசாங்கங்கள் செய்துவருகின்றன எனவும் அறிகின்றோம். அப்படியிருக்க நாம் மட்டும் ஏன் தேவை அற்ற ஒரு செயலை மேற் கொள்ளவேண்டும் என்று என் உள்ளம் கேட்கிறது. கேட்டு என்ன பயன்? நாம் சொன்னால் யர்ர் கேட்பார்? வல்லான் வகுத்ததே வாய்க்காலன்றோ! என்றாலும் இயற்கை அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் நாள் நெடுந்தொலைவில் இல்லை என்றுமட்டும் திட்டமாகக்கூறுவேன். நீ இந்த சூழல்களுக்கு இடையில் சிக்காமல் பார்த்துக்கொள். அதோ உன் அன்புச் செல்வம் அழைக்கிறது. அணைத்து மகிழ்ந்து இன்புற்று வாழ்! இன்னும் குழந்தை பற்றி எத்தனையோ கடிதங்கள் எழுதத் தோன்றுகிறது. என்றாலும், நீ விரைவில் இங்கே வரப்போகிறாயல்லவா ? அப்போது அனைத்தையும் நேரில் சொல்லுகிறேன். கேட்டுப் பயன் பெறுவாய் என நினைக்கிறேன். நீயும் உன் செல்வமும் நீடு வாழ்க என வாழ்த்துகின்றேன். அன்புள்ள, அப்பா.