பக்கம்:மக்கட் செல்வம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செம்மலோர்

49


இக்கடிதத்தில் அப்புலவருள் ஒருவர் வாய்மொழியைக் காட்ட நினைக்கிறேன். அப்புலவர் அச்சொற்களை, மக்கள் பெற்ற அந்தத் தாயின் வாக்காகவே கூறுதல் சிறப்புடையதாகும். ஒரு குழந்தையைப் பெற்ற தாய் எவ்வளவு பெருமிதம் உடையவளாக வாழ வேண்டும் என்பதையே அந்த அடிகள் உனக்கு உணர்த்தும் என்பது தெளிவு. வேறு எத்தகைய செல்வத்தை பெறாவிடினும் இக்குழவிச் செல்வம் பெற்றவரே பெற்றவர் எனப்படுவர் என்பதை உலக வழக்கு நன்கு உணர்த்துகிறதன்றோ.

கோசிகன் கண்ணனார் என்பவர் சிறந்த புலவர். அவர் ஊர் செல்லூர் போலும். எனவே அவர் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் என்றே அழைக்கப்பட்டார். அவர் இப்பிள்ளைமை இன்பத்தைப் பெரிதாகப் பாராட்டியுள்ளார். அவர் தம் பாடல் அகநானூற்றில் (66) இடம் பெற்றுள்ளது. அதில் செல்வன் ஊடல் தீர்க்கும் வாயிலாக அமைவதைக் காட்டி இருக்கிறார். அவ்வூடல் தீர்க்கும் செயல் பற்றி முன்னமே உனக்கு விளக்கி எழுதி இருக்கிறேன் அல்லவா! எனவே அது பற்றி இங்கே நான் அதிகமாக எழுதவேண்டா. எனினும் அக்காட்சியைக் காட்டி மேலே செல்லுகிறேன்.

பரத்தையிற் பிரிந்த தலைவன் புது நலம் நுகர விரைந்து செல்லவேண்டி வந்தது. அதற்கு அவன் தன் வீடு உள்ள சொந்தத் தெருவைத்தான் கடக்க வேண்டியிருந்தது. அவன் தனது தேர்மேல் ஏறிப் பாகன் செலுத்த வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். அவன் வீட்டு வாயிலில் தேர் சென்று கொண்டிருந்தது. அதே வேளையில் அவன் தன் பூங்கட் புதல்வன் வாயிலில் வந்து நின்றான். அக்குழந்தையைக் கண்டும் அவனால் மேலே செல்ல முடியுமா? தேரை நிறுத்தினான் ; இறங்கினான் ; புதல்வனை வாரி அணைத்து மகிழ்ந்தான். விட்டு ‘வீட்டிற்-