பக்கம்:மக்கட் செல்வம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செம்மலோர்

51



வாழ்க்கையின் ஊதியமாகச் சொல்லிவிட்டாரே! ஆம்! உலகில் பிறந்த ஒருவர் என்றென்றும் அவர் புகழ் நிலைக்குமாறு ஒரு செயலையாயினும் செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும். அதுதான் பிறவியின் பயன். அவர் தம் வழிவழி வரும் கான்முளைகளைக் கண்டு இவன் முன்னோர்-இன்னார் இன்னின்ன சிறப்பினைச் செய்து புகழ் பெற்றார் என்று உலகம் என்றென்றும் பாராட்டிக்கொண்டே இருக்கும். எனவே புகழ் நிலைத்து வாழ்வது அவர் தம் கான்முளைகளாலேயாம்.

சங்க காலத்திலும் பிற்காலத்திலும் வாழ்ந்த புலவர்கள் தம் முன்னின்ற புரவலர்களைப் பாராட்டும்போது அவர் தம் முன்னோருடைய புகழ்ச் செயல்களை எல்லாம் பாராட்டி நின்ற பெருமைகளை நீ கேட்டிருப்பாய் அல்லவா! கோவலனை - எல்லாச் செல்வமும் இழந்து மதுரை நோக்கிச் செல்லும் கோவலனை - வழியிடைக் கண்ட மறையோன் அவன் தன் முன்னோருடைய புகழையெல்லாம் சொல்லிச் சொல்லிப் பாராட்டியதாக இளங்கோவடிகள் அழகுபடக் காட்டவில்லையா!

'உயர்ந்து ஓங்கிய விழுச் சிற்பின்
நிலந்தந்த பேர் உதவி
பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்'

(மதுரைக் காஞ்சி 59-61)

என்று நெடுஞ்செழியனைப் பாடவந்த மாங்குடி மருதனார் அவனது முன்னோனாகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியன் புகழைப் பாடிப் பாராட்டவில்லையா! ஆம்! அக்குடி வாழையடி வாழையாக நெடுஞ்செழியன் வரை வளரவில்லையானால் வடிபலம்ப நின்றவன் இசையை வாயால் பாடுவார் யார்! எனவே இம்மை உலகத்து என்றும் இசையொடு விளங்க உதவுபவர் கான்முளைகளே அன்றோ! இவ்வாறு பெற்றவர்களுக்கு மறுமை தருபவரும்-அவர்களைத் தீமையினின்று விளக்கி நன்னெறிப்படுத்துபவரும் மக்களே