பக்கம்:மக்கட் செல்வம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்

81


பெறுகின்றது என்பதை நீ அறிவாய். சந்திரனைத் தம் மகவுடன் விளையாட அழைக்கும் தாய்தான் எத்தனைச் சதுருடன் ‘சாமபேத தான தண்ட’ முறைகளைக் கையாளுகின்றாள். அவற்றையெல்லாம் நீ அடியவர் தம் நூலில் படித்தறிந்துகொள். விரைவில் சிறந்த பிள்ளைத் தமிழ் நூல்கள் சில வாங்கி அனுப்புகிறேன்.

அம்புலிக்குப்பின் ஆண்பிள்ளைக்குச் சிற்றிலும் சிறு தேரும் சிறுபறையும் விளையாட்டுப் பருவங்களாகக் காட்டுவர், பெண்பாலுக்குக் கழங்கு, அம்மானை, ஊசல் இவை களைப் பருவங்களாகக் காட்டுவர். இவற்றின் வழி குழந்தை இயங்கும் விளையாடல்களையெல்லாம் நீ இன்னும் குழந்தை வளர வளரக் காண்பாய். எனவே அவை பற்றி எல்லாம் இன்றே நான் அதிகமாக ஒன்றும் காட்டவில்லை. என்றாலும் முத்தப் பருவத்தில் ஒரு பாடலை மட்டும் காட்டி இக்கடிதத்தை முடித்துக்கொள்கிறேன்.

‘கத்தும் தரங்கம் எடுத்தெறியக்
      கடுஞ்சூல் உளைந்து வலம்புரியின்
கரையில் தவழ்ந்த வாலுகத்தில்
      கான்ற மணிக்கு விலையுண்டு
தந்தும் கரடவிகட தட
      தந்திப் பிறைக்கூன் மகுப்பில் விளை
தரளந் தனக்கு விலையுண்டு
      தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்
கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்
      குளிர்முத் தினுக்கு விலையுண்டு
கொண்டல் தரு நித்திலம் தனக்கு
      கூறும் தரமுண்டு உன்கனிவாய்
முத்தம் தனக்கு விலை இல்லை
      முருகா முத்தம் தருகவே
முத்துக் குமரா திருமலையின்

      முதல்வா முத்தம் தருகவே
அன்புள்ள,
அப்பா