பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்தமிழ் நாட்டு மலைகளில் பளியர்கள் வாழ்கிறார்கள் பொதிகைமலை, சிவகிரிமலை, ராமநாதபுரம் மாவட்டம் ராஜபாளையம் மலைப் பகுதிகளிலும் பளியர் வாழ்கிறார்கள். இவர்களைப் பாபநாசம் மலைப்பகுதிகளில் 'மலைப் பளியங்கர்' என்று அழைக்கிறார்கள். இவர்களைப் பற்றிய கட்டுரையொன்று உள்ளது.

பலதுறை ஆய்வுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இரண்டு பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலின் முதற் பகுதியில் உள்ளன. வேலன் வழிபாடு பகவதி வழிபாடு ஆகிய இரண்டு முக்கியமான நாட்டுமக்கள் வழிபாட்டுக் கருத்துகளை தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு பண்பாடுகளை ஆராய்ந்து பி.எல். சுவாமி சில உண்மைகளைக் கண்டறிகிறார். இவ்வழிபாடுகளில் காலப்போக்கில் தோற்றத்திலிருந்து, வரலாற்றுக் காலங்களில் கலந்துவிட்ட தனித்தனி கருத்துகளையும், மரபுகளையும் ஆய்வாளர் இனம்பிரித்துக் காட்டுகிறார். இத்தகைய ஆராய்ச்சி தமிழ் நாட்டின் பண்பாட்டு வரலாற்றிற்குப் புதியதாகும்.

இவையாவும் 'ஆராய்ச்சி' இதழில் கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியிடப்பட்டவை. இப்புதிய ஒப்பு ஆய்வுகளுக்கும், மானிடவியல் ஆராய்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் வகையில் நியூ செஞ்சு புத்தக வெளியீட்டகத்தார் இக்கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்துள்ளனர். அவர்களுக்கு ஆய்வாளர்கள் சார்பில் நன்றி.


நா. வானமாமலை