24
எண்ணிக் கொண்டான்; மக்களே, தமது திறத்தைக் காட்டி உரிமையை நிலை நாட்டிக் கொள்ள வேண்டிய கட்டத்தை நோக்கி விரைந்தனர். பனிப்பாறை உருகுவது போல, மக்களின் எண்ணம், இந்த வகையிலே மாறிக்கொண்டிருந்தது. அரண்மனைக்குள்ளே இருந்தவர்களால் இந்த மாறுதலை உணர முடியவில்லை.
மக்கள், பக்கிங்காமின் கொடுமைகளைப் பேசலாயினர்.
வீடுகளிலும் கடைவீதிகளிலும், பாசறைகளிலும், பார்லிமெண்டிலும், இந்தக் கண்டனக் குரல் கிளம்பிற்று.
அவன் இருக்குமட்டும் அரசன் அக்ரமம் செய்தபடி தான் இருப்பான் என்றனர் பலர். ஒரு சிலர் "அவன் இருக்குமட்டுந்தானா! அவன் போனால் வேறு ஒருவன்! அக்ரமம் அழியாது. அது அழிய வேண்டுமானால், அரசன் கொண்டுள்ள பயங்கரமான கொள்கை அழிய வேண்டும்" என்று எடுத்துக் கூறினர். நெடுங்காலமாகத் தங்கள் உரிமைகளைப்பற்றி எண்ணிப் பார்க்காமல், நடப்பது நடக்கட்டும் நமது வேலையை நாம் கவனிப்போம் என்ற போக்கிலே இருந்து வந்த மக்கள், மற்ற வேலைகளைப் பிறகு கவனிப்போம், இந்த விவகாரம் முதலில் தீர்க்கப்பட்டாக வேண்டும்—பாம்பைத் தடிகொண்டு அடித்துக் கொல்வதற்காக, எந்த நேரமும் தடியும் கையுமாகத் திரிந்துகொண்டிருப்பதைவிட, ஒரு பலமான முயற்சி செய்து, புற்றினை அழித்திடுவது நல்லது; இல்லை, அது கூடப் போதாது, நச்சரவம் குடிகொள்ளும் புற்றுகளுக்கு இடமளிக்கும். கள்ளிகாளான் நிரம்பிய இடத்தையே சரிப்படுத்தியாக வேண்டும் என்று தீர்மானித்தனர்.
மக்களின் பொது வாழ்வு, ஓரளவு செம்மையாகவே இருந்தது; தாங்கமுடியாத வரிப்பளு அவர்கள் மீது விழ-