27
பல முறை சமரச ஏற்பாடுகள் பேசப்பட்டன; ஒவ்வொரு முறையும் மாமன்றத்தின் குரலிலே உறுதி வளர்ந்தது. மன்னன் எக்காரணம் கொண்டும் மதத்துறையில் மக்களுக்குப் பிடிக்காத மாறுதல்களைச் செய்யக்கூடாது என்றும், எந்த அதிகாரியை நியமித்தாலும் மாமன்றத்தாரைக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கூறினர், மாமன்றத்தாரின் குரலிலே உறுதியும் வளர்ந்தது, அவர்களின் அறிவுப்புகளின் வகையும் வளரலாயிற்று.
ஐந்துமுறை மாமன்றம் கூட்டப்பட்டது, கசப்புவளர இது உதவிற்றே தவிர, பலன் ஏதும் ஏற்படவில்லை. மன்னனுடைய போக்கை நாடு அறிய, இந்த மாமன்றக் கூட்டங்கள் பயன்பட்டன. மக்களின் உரிமைகளைக் காக்க அமைக்கப்பட்ட மாமன்றத்தை மன்னன் அலட்சியப்படுத்துவதுண்டு, மக்கள் கொதிப்படைந்தனர்; அவர்கள், போர்க்கோலம் பூண்டு கிளம்புவதை மகனுக்குக் காட்சியாக்கி வைத்தான் ஜேம்ஸ்.
மாமன்றம் பணம் திரட்டித் தர மறுத்தால் என்ன மன்னன் கேட்டால் மக்கள் தரத்தானே வேண்டும்? மாமன்றத்தின் தயவு ஏன்? என்று எண்ணினான் ஜேம்ஸ். உடனே, புதிய வரிகள். கட்டாயக் கடன்கள், இனாம்கள், என்று வகை வகையாக முறைகளை வகுத்து, மக்களிடம் பணம் பறிக்கத் தொடங்கினான், மன்னன், எந்த அளவுக்குச் செல்லத் துணிந்து விட்டான் என்பதை மட்டுமல்ல, மன்னராட்சி முறை எவ்வளவு தூரம் கேடு உண்டாக்க முடியும் என்பதை இந்தச் சம்பவங்கள் விளக்கமாயின, மன்னனைத் திருத்துவது என்ற சாதாரண நோக்கம், மன்னராட்சி முறையையே திருத்தியாகவேண்டும் என்று வளர்த்தது; கூர்த்த மதிபடைத்த தீவிர நோக்குடையார் மன்னராட்சி என்ற முறைதான் எதற்கு என்றே எண்ணத் தொடங்கினர்.