பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

யத்தை, எப்பாடுபட்டெனும்‌ நிறைவேற்ற வேண்டும், என்ற எண்ணம்கொண்ட நாடு, அந்த நாட்டு இளவரசி, சார்லசின்‌ தேவியாகிவிட்டால்‌, பிரிட்டனில்‌ பிராடெஸ்டெண்டு மார்க்கத்தின்‌ கதி என்ன ஆகும்‌, என்று எண்ணி அஞ்சினர். திருமணம், சொந்தவிஷயம்‌, அதிலும்‌ இதுவோ அரண்மனைத்‌ திருமணம்‌, எனவே, இதிலே குறுக்கிட்டு, கருத்துக்‌ கூறல்‌ கண்ணியமல்ல, என்ற எளிதில்‌ புரியக்கூடிய அறிவு பெறாதவர்களல்ல, மக்கள்‌; அவர்‌கள்‌ அதனை நன்றாக அறிவர்‌, ஆனால்‌ மன்னனாக வேண்‌டிய சார்லஸ்‌, கத்தோலிக்க மார்க்கக்‌ கன்னியை மணந்து கொண்டு, திருமண நிபந்தனையின்‌ காரணமாகவோ, அல்லது காதல்‌ கணையின்‌ விளைவாகவோ, பிரிட்டனை மீண்டும்‌ கத்தோலிக்க நாடு ஆக்குவது என்று முனைந்தால், ஏற்படக்கூடிய விபத்துக்கள், படுகொலைகள்‌, இரத்த வெறிச்‌ செயல்கள்‌, அக்ரமங்கள் இவைகளைப்‌ பற்றி எண்ணிப்‌ பார்க்கும்‌ பொறுப்பை அவர்கள்‌ அறியாமலிருக்க முடியாது! எனவேதான்‌. நாட்டுக்குப்‌ பெருங்‌கேட்டினைத்‌ தரவல்ல திருமணம்‌ கூடாது, என்று கூறினர்‌ மன்னனா கேட்பான்‌! ஆண்டவனின்‌ அம்சம்‌!!

திருமண ஏற்பாடுபற்றி, ஜேம்சும்‌, சார்லசும்‌; பக்கிங்‌காமும்‌ ஆவல்‌ அதிகம்‌ கொண்டனர்‌; ஸ்பெயின்‌ அரசனோ இதிலே விருப்பம்கொண்டவனல்ல, பிரிட்டனைத்‌ தன்‌ பக்கம்‌ இழுக்க, இந்தத்‌ திருமணப் பேச்சை ஒரு வாய்ப்‌பாக்கிக்கொண்டான்‌. பல முறை தூதுசென்றும், ஏற்பாடு கனிவடையாததால்தான் காதல்‌ போர்க்களம்‌ நோக்கி, சார்லசே புறப்பட்டான்‌.

“அண்ணா! நான்‌ அந்த நாத்திகனைத்‌ திருமணம்‌ செய்துகொள்ள முடியாது”, என்று ஸ்பெயின் இளவரசி, உடன் பிறந்தவனிடம் கண்டிப்பாகக்‌ கூறிவிட்ட செய்தி