பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மாறுவேடம்‌ அணிந்து, மகிழ்ச்சியாகச்‌ செல்லும்‌ இளவரசனுக்கு என்ன தெரியும்‌? கத்தோலிக்க மார்க்கத்தினள் இளவரசி எனவே, அந்த மார்க்கமல்ல, பிரிட்டிஷ் இளவரசன்‌ என்றதும்‌, நாத்திகன்‌ என்று கண்டிக்க நேரிட்டது—அந்த நாட்களிலே அதுதான்‌ முறை!

ஸ்பெயின்‌ நாட்டு அரச குடும்பம்‌, அடைய இருக்கும் பூரிப்பையும்‌ பெருமையையும்‌, ஏற்பாடு செய்யப்‌ போகும்‌ வரவேற்புகளையும்‌ விருந்துகளையும்‌, அங்கு பூவையர்‌ தர இருக்கும்‌ புன்னகை இன்பத்தையும்‌, எண்ணி எண்ணி மகிழ்ந்தே, இளவரசன்‌ பக்கிங்காமுடன் செல்கிறான். ஸ்பெயின் நாட்டிலேயோ, பாதிரிகள்‌ கவலை நிரம்பிய முகத்துடன்‌ கூடி, ஏடு பல புரட்டியபடி உள்ளனர், இந்தத் திருமணம், சன்மார்க்கத்துக்கு உகந்ததா என்பதுபற்றி. மணப்பெண்ணோ, நாத்திகனுக்கு நான் வாழ்க்கைப்பட மாட்டேன்‌, என்று உறுதியை வெளியிட்டாகிவிட்டது— எனினும்‌, எதற்கும்‌ இரண்‌டெழுத்து ஆங்கிலம்‌ கற்றுக்கொள்வது நல்லது என்று ஒரு ஆசிரியர்‌ அமர்த்தப்பட்டிருக்கிறார்‌.

ஸ்பெயின்‌ போகுமுன்‌, ஒய்யார பக்கிங்காமும்‌, உடன்‌ சென்ற சார்லசும்‌, பாரிசில்‌ ஒரு நடன விழாவைக் கண்டனர்—அங்குதான், சார்லஸ், பிரன்ச்சு நாட்டு இளவரசி ஹெனிரிடாவைக் கண்டான். அழகி! பதினான்கு ஆண்டுகள் நிரம்பிய பாவை பார்த்தவரை ஈர்த்திடும் வனப்பு! எனினும், சார்லஸ், எங்ஙனம் அந்த இன்பவல்லியிடம் மனதைச் செலுத்தமுடியும்? அவன் ‘தேவி’ இருக்கும் திருத்தலம் ‘மாட்ரிட்’ ஸ்பெயின் நாட்டுத் தலைநகர். நடன விழாவிலே கண்ட நளினிதான்‌ தான் நாயகியாகப்போகிறாள்‌ என்பதைச்‌ சார்லஸ்‌ எப்படி அறியமுடியும்‌. அழகாகத்தான்‌ இருக்கிறாள்‌ இந்த அரசிளங்குமரி, மனம்‌ நெகிழத்தான்‌ செய்கிறது, என்றாலும்‌,