37
பலன் இல்லையே, அவள் 200,000 பவுன்தானே கொண்டு வருவாள்; அதோ ஸ்பெயினில் உள்ள திருமகள் 600,000 பவுனல்லவா கொண்டு வர இருக்கிறாள்! எனவே, பிரன்ச் காரிகையைக் கொண்டு களிப்புற்றாலும் காரியம் வேறு இருக்கிறது என்ற உறுதியுடன் ஸ்பெயின் சென்றான் இளவரசன், அங்கு அவன் கண்டது வரவேற்பல்ல! காதல் பொழியச் சென்றான், கண்டிப்பான நிபந்தனைகளை அரசாங்க அலுவலர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கும் வேலைதான் அதிகம் இருந்தது.
சார்லசுக்கு, இளவரசியின் காதல் கிடைக்கவில்லை—பேட்டிதான் கிடைத்தது! உயிரற்ற பேச்சு, கனிவற்ற பார்வை, அதரம் துடிக்கவில்லை, கன்னம் சிவக்கவில்லை, கன்னியின் பார்வையிலே ஒரு செய்தியும் கிடைக்கவில்லை, மற்றோர் முறை மலர்த் தோட்டத்திலே அவள் உலவிக் கொண்டிருந்தாள்—காதலுக்கு ஏற்ற இடம் இந்த இயற்கைச் சித்திரம் என்றெண்ணி, சார்லஸ் அணுகினான் மயில் பறந்தே போய்விட்டது!
கண்டதும் காதல்கொள்ளாத காரிகை, எந்த மாளிகையிலே இருக்கிறாள் என்று கர்வம் பிடித்துப் பேசும் பக்கிங்காம் பிரபுவுக்கு, நிலாச் சோறும் கிடைக்கவில்லை! அவனுடைய ஆணவப்போக்கு அருவருப்பே உண்டாக்கிற்று. பணத்தாசை கொண்டு, பல்லிளிக்க வந்திருக்கும் இளவரசன், அங்கு கேலிப் பொருளாக்கப்பட்டான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடுமையான நிபந்தனை எடுத்துக் கூறப்பட்டது. சார்லசுக்கு உண்மை விளங்கிவிட்டது; ஊர் சென்றால்போதும் என்றாகிவிட்டது. பிரிட்டனில், ஜேம்ஸ் மன்னனும் அச்சம் கொண்டான். காதல் பொழியச் சென்ற ஆசை மகனை, காதகர்கள், சிறைப்படுத்திவிட்டு, எல்லா நிபந்தனையையும் ஏற்றுக்கொண்-