பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

மக்களைப்‌ பூச்சிப்‌ புழுக்களென எண்ணும்‌ ஒரு மன்னனை நம்பினான்‌, மக்களை எப்படி வேண்டுமானாலும்‌ அடக்கி ஒடுக்கலாம்‌ என்று மன்னனை நம்பச்‌ செய்தான்‌. பதைக்கப்‌ பதைக்கத்‌ தாக்கினான்‌, பழிதீர்த்‌துக்கொள்ளும்‌ நாளன்று, பாகாய்‌ உருகிப்‌ பயன்‌ என்ன, கண்ணீர்‌ உகுத்‌துக்‌ காணப்போவதென்ன, ஸ்டாபோர்டு பலியிடப்பட்‌டான்‌. முதல்‌ முரசு! என்றனர்‌ மக்கள்‌. பலிபீடம்‌ முதல்‌ காணிக்கை!

மன்னன்‌ சார்பினர்‌, ஸ்டாபோர்டு வீழ்ந்துபட்டது கண்டு, விலாவில்‌ வேல்‌ பாய்ந்தவராயினர்‌. பெரும்‌ முயற்சி செய்து இந்த மாமன்றத்தை அழித்தாலொழிய, மன்னன்‌ பாடு ஆபத்துதான்‌ என்பது புரிந்துவிட்டது!

படைகொண்டு தாக்கினால்‌ என்ன? எண்ணம்‌ ஏற்‌பாடாக உருவெடுத்தது, பயர்சி, ஜெர்மின்‌, கோரிங்‌, எனும்‌ படைப்பிரிவுத்‌ தலைவர்கள்‌, பல்லிளித்தனர்‌. சதி பிறந்தது.

மன்னனுக்காகப்‌ படை கிளம்புவது என்று ஏற்பாடு வகுக்கப்பட்டது. ஆனால்‌, சதியை உடனிருந்து வகுத்‌துக்கொடுத்த கோரிங்‌ என்பானே, மாமன்றத்துக்கு இரகசியத்தைக்‌ கூறிவிட்டான்‌ — சதிகாரர்களை மாமன்றம்‌ துரத்திற்று — சிலர்‌ ஓடிவிட்டனர்‌, சிலர்‌ பிடிபட்டனர்‌, கருவில்‌ சிதைந்தது காதகம்‌. காவலன்‌ மீது கடுங்கோபம்‌ கொண்டனர்‌ மக்கள்‌.

மாமன்றம்‌, மக்கள்மீது பூட்டப்பட்டுள்ள தளைகளை ஒடித்தெறிகிறது, கொடுமையைக்‌ களைகிறது, இனி மன்னன்‌ பயங்கரத்‌ தாக்குதலால்‌, தன்‌ நிலையைப்‌ பலப்‌படுத்த முயற்சிப்பான்‌, கண்காணிப்பாக இருக்க வேண்‌டும்‌, எந்த நேரமும்‌ ஆபத்து மூளக்கூடும்‌, எதற்கும்‌ தயாராக இருக்கவேண்டும்‌ என்று நாட்டினர்‌ கருதினர்‌.