பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

9


கவுன்சிலரானதால் காண்ட்ராக்டருக்குத் தொழிலும் வியாபாரமும் வளர்ந்தது -- தன்னையொத்த செல்வவான்களிடையே மதிப்பு வளர்ந்தது.

முனிசிபல் டாக்டரானதால், தம்பிக்கு 'வருமானம்' அதிகமாக வளரவில்லை -- வேலை வளர்ந்தது -- முனிசிபல் நிர்வாகத்தினருக்கு, புதிய புதிய திட்டங்கள் -- சுகாதார சம்பந்தமான யோசனைகள் கூறி வந்தான் -- அதற்காகச் சிந்தனையைச் செலவிட்டான் -- பல ஆராய்ச்சிகள் நடத்தி வந்தான்.

அவ்விதமான திட்டங்களிலே, கடலோரத்திலே, குளிக்கும் இடம் அமைப்பது என்பதொன்று. பொழுதுபோக்குக்காக, பலர், பல இடங்களுக்குப் போகிறார்களல்லவா, ஆண்டிற்கோர் முறை - மலைச்சாரலுக்கோ- மலர் வனத்துக்கோ - பாரிஸ் போன்ற நாகரீக நகருக்கோ அதுபோல; இந்த குளிக்குமிடம் வருவர் - பல நாட்கள் தங்கி இருப்பர் - அதனால் அவர்களுக்கும் சுகாதாரம் வளரும் - அவர்கள் வந்து தங்குவதால், நகருக்கும் பொருளும் புகழும் வளரும் - இது டாக்டரின் எண்ணம். இந்தத் திட்டத்தை மிகச் சிரமப் பட்டுத் தயாரித்து, நகரசபையினருக்குத் தர, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர் - அதற்கான வேலையும் துவக்கப் பட்டது.

ஏற்கனவே பொதுமக்களின் அன்பைப் பெற்றிருந்த டாக்டருக்கு, இந்தத் திட்டம் மேலும் ஆதரவைத் திரட்டிற்று, அவருடைய அறிவும், பொதுமக்கள் நலனில் அவருக்குள்ள இக்கரையும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

உள்ளூரில் ஒரு பத்திரிகை - அதிலே டாக்டரைப் புகழ்ந்தும், அவருடைய புதிய திட்டத்தை வரவேற்றும், ஒரு அழகிய தலையங்கமும் பிரசுரமாயிற்று.