பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

11


துக்கு, 'விலை' அதிகப்படும் - கடைகள் அமைக்க விரும்புவோர், புதிய வீடுகள் கட்ட விரும்புவோர், காட்சிச் சாலைகளை அமைக்க வருவோர், ஆகியோர், நல்ல வாடகை தருவர், நல்ல விலை கொடுத்தும் வாங்குவர், போடும் பணத்தைப்போல, பத்து, இருபது மடங்கு அதிகமான பணம் கிடைக்கும், என்ற யோசனை ஏற்பட்டது, இலாப வேட்டைத் தொழிலில் தேர்ச்சி பெற்ற அண்ணனுக்கு. உடனே மோப்பம் பிடித்த புலியானான். புதிய திட்டத்தைப் பிரமாதமானது என்று புகழ்ந்தான் - தம்பியைப் பாராட்டினான் -- முனிசிபல் சபைக்கு, புதிய திட்டத்தைச் சிபார்சு செய்தான் -- புதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தான்.

டாக்டருக்குப் பெருமகிழ்ச்சி. பொதுஜன நன்மைக்கும், ஊரின் கீர்த்தி பரவுவதற்கும் உகந்த, தன் புதிய திட்டத்தை அண்ணன் ஏற்றுக்கொண்டது சுண்டு, களித்தான் -- பொதுஜனங்களிடம் அபிமானம் அற்றிருந்த தன் அண்ணனுக்கு, இந்த அளவுக்கேனும் பொதுமக்களிடம் அக்கரை உண்டாயிற்றே என்று எண்ணி உள்ளம் பூரித்தான். அவன் அறியான் புதிய திட்டத்தை முனிசியல் சபை, அங்கீகரித்துக்கொள்வதற்கு முன்னம், 'புறம்போக்கு’ நிலத்தை, அண்ணன், இலாப நோக்கத்துடன் மலிவான விலைக்கு வாங்கிக் கொண்டுவிட்டான், என்பதை. அண்ணனுக்கும், பொதுமக்களின் நன்மையிலே அக்கரை உண்டாயிற்று என்றே அவன் எண்ணிக்கொண்டான். பாவம்! டாக்டருக்கு, மக்களுக்கு எதெது நல்லது என்பதைக் கண்டறிய பல ஏடு களைப் படிக்கவும், சந்திக்கவும், திட்டங்கள் தீட்டவும், நேரம் அதிகம் செலவானதால், தன் அண்ணன் போன்றவர்களின் உள்ளத்தின் தன்மை எப்படிப்பட்டது என்று கண்டறிய, நேரம் இல்லை.