பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

15


பார்த்த ஆராய்ச்சியுடன் திருப்தியடையாமல், பிரபல நகர ஆராய்ச்சியாளருக்கு, தண்ணீரை அனுப்பிவைத்தார். அவருடைய, ஆராய்ச்சி முடிவு கிடைத்ததும், தமது புதிய திட்டத்துக்குப் பரிபூரணச் சிறப்பு உண்டு, என்பதை உலகே ஒப்புக் கொள்ளும் என்பது, டாக்டரின் எண்ணம்,

நகர ஆராய்ச்சியாளரின் கடிதம், டாக்டரைத் தூக்கி வாரிப்போட்டுவிட்டது.

"தாங்கள் பரிசோதனைக்கு அனுப்பிய நீரை, நன்கு ஆராய்ச்சி செய்து பார்த்து, கீழ்க்காணும் முடிவுக்கு வந்திருக்கிறோம்.

1. தண்ணீர் அசுத்தமானது.
2. சுத்தப்படுத்த முடியாதபடியான அசுத்தமானது.
3. கிருமிகள் நிரம்பியது.
4. கிருமிகள், ஆரோக்யத்தைக் கெடுக்கக்கூடியன.
5. விஷ ஜூரம் போன்ற கொடிய நோய்களை உற்பத்தி செய்யக்கூடியன, அந்தக் கிருமிகள்.
6. இந்தத் தண்ணீரை உட்கொண்டாலோ, குளிக்க உபயோகித்தாலோ, மக்களுக்கு, கொடிய நோய் உற்பத்தியாகும்.
7.இந்தத் தண்ணீர் உள்ள இடத்தை தூர்த்து விடவேண்டும்.

8.பொதுஜனம், இதை, எந்தவகையிலும் உபயோகிக்காதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்."

இந்தக் கடிதத்தைக் கண்டார், டாக்டர் -- கண்ணாடிப் பாத்திரத்தின்மீது, கருங்கல் வீழ்ந்தது போலாயிற்று!