பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மக்கள் தீர்ப்பு


விஷ நோய்! கேடு தரும் கிருமிகள்! -- ஆஹா! இவைகளைக்கொண்ட தண்ணீரை, பொதுமக்களுக்குத் தர இருந்தேனே! பெரிய கேடு செய்ய இருந்தேன்! என்ன பேதமை! என்ன அவசரம்! ஊருக்கு அழகு, அலங்காரம், வருவாய்க்கு வழி, என்று எண்ணி, குளிக்குமிடம் கட்டும் திட்டம் தீட்டினேன் - இப்போதல்லவா தெரிகிறது, இது அழிவுக்கு வழி என்று! பொதுமக்கள் உயிரைக் குடிக்கும் கிருமிகளை, நான் என் அறியாமையாலும் அவசரத்தாலும் மக்கள்மீது ஏவி விட இருந்தேனே -- மாபெரும் துரோகமல்லவா செய்ய இருந்தேன் -- நல்லவேளை, இந்த ஆராய்ச்சியாளர், உண்மையை உரைத்தார் - ஊர் மக்களைக் காப்பாற்றினார் -- உலகுக்கே பெரிய நன்மையைச் செய்தார்! பொதுமக்களுக்கு என் அலசர புத்தியால், பெருந் தீங்கு இழைக்க இருந்தேன் -- குளிக்குமிடம் கட்டும் திட்டம், கொலைகாரத் திட்டம், பொதுமக்களின் உயிரைச் சூறையாடும் திட்டம்! பேய்த் திட்டம்! கிருமிகள் வளர்ப்புத் திட்டம்! நோயூட்டும் திட்டம்! நீசத்தனமான திட்டம்! - என்றெல்லாம் டாக்டர் எண்ணினார். எவ்வளவு பெரிய கேடு நேரிட இருந்தது என்பதை எண்ணிப் பார்க்கும்போதே அவருடைய குலை நடுங்கிற்று. மனக்கண் முன்னே, குளிக்குமிடத்துக்கு ஆணும் பெண்ணும் குதூகலமாக வருவது -- குளித்து மகிழ்வது -- வீடு திரும்பியதும் அவர்களுக்கு விஷ ஜூரம் வருவது -- வீட்டிலே குய்யோ முறையோ என்று கூவுவது -- பலர் மாண்டு போவது -- போன்ற காட்சிகள் தோன்றின, பதறினார். எடுத்தார் பேனாவை, மள மளவென்று எழுதலானார், புதிய திட்டம் தீதானது கைவிட்டு விடவேண்டும்; என்று -- எழுத்துக்கள் வேக வேகமாக உருண்டோடி வந்தன -- ஊர் மக்களின் உயிருக்கு வரவிருந்த ஆபத்தைத் தடுக்க முடிந்தது தக்க சமயத்திலே என்ற ஆர்வத்துடன்