பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

17


எழுதினார், எழுதினார், விளக்கமாக, ஆதாரத்துடன். எழுதி முடிந்ததும், திருப்தி ஏற்பட்டது. பொதுஜனத்துக்குச் செய்ய வேண்டிய மகத்தான சேவையைச் செய்தாகிவிட்டது -- கடமையை நிறைவேற்றிவிட்டோம், என்று களிப்புண்டாயிற்று. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் மூத்தவர் - முகத்தில் புன்னகையுடன், ஆர்வத்துடன். டாக்டர், "அண்ணா! நான் ஒரு முட்டாள் -- அவசரப் புத்திக்காரன்! அநியாயம் செய்ய இருந்தேன்! பெருங் கேடு நேரிட இருந்தது என்னால்! பொது மக்களுக்குப் பெரிய நாசம் வர இருந்தது என் பேதமையால்" என்று கூவலானார். அண்ணன், 'இதென்ன புதிய உளறல்' என்று எண்ணிக் கொண்டு, "தம்பீ! நிரம்ப வேலை செய்து கொண்டிருந்தாயோ?" என்று கேலியாகக் கேட்டார் -- "ஆமாம், அண்ணா! நிரம்ப வேலை! என் வாழ்நாளிலே, இதுவரை இபபடிப்பட்ட முக்கியமான வேலைபில் ஈடுபட்டதே இலலை என்று கூறலாம் - அப்படிப்பட்ட அருமையான காரியம்” என்று டாக்டர் மேலும் ஆர்வத்துடன் கூற, மூத்தவர், சாவதானமாக, ”குளிக்குமிடம் அமைக்கும் திட்ட சம்பந்தமாகத் தானே தம்பீ, வேலை செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டார். "சந்தோஷம்! அத்தத் திட்ட சம்பந்தமாக எவ்வளவு வேலை செய்தாலும் தகும், முக்கியமான திட்டம்" என்றார் மூத்தவர் -- புதிய திட்டத்தின் மூலம் தனக்கு கிடைக்க இருக்கும் இலாபத்தை எண்ணிக்கொண்டு. அவர் எந்த நோக்கத்தோடு இதைப் பேசுகிறார் என்பதை அறியாத டாக்டர், "முக்கியமான திட்டம் என்று சாதாரணமாகப் பேசுகிறீர்களே அண்ணா! பொதுஜனத்தின் உயிரைப்பற்றிய திட்டமல்லவா அது" என்றார் - 'ஆமாம்' என்று அசை போட்டார் மூத்தவர் -- "பொதுஜனத்தின் சேவையைக் கருத்தில் கொண்டு தயாரித்த திட்டமல்லவா அது