பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மக்கள் தீர்ப்பு


அதுபற்றி மேலும் பல ஆராய்ச்சிகளை நடத்தியபடி தானே இருந்தேன்" என்று துவக்கினார் டாக்டர். "நானும் ஒவ்வோர் இரவும் நடுநிசிவரையில் உன் அறையில் விளக்கெரியக் கண்டேன்" என்றார் மூத்தவர் -- வீண் செலவு செய்கிறார் தம்பி! என்பதைக் குறிப்பாக உணர்த்தினார். "வீண் போகவில்லையே அண்ணா! என் உழைப்பு வீண் போகவில்லை. விபரீதம் நேரிட இருந்தது, நான்மட்டும் சற்று அக்கரையற்று இருந்துவிட்டிருந்தால், பொதுமக்கள் பெரியதோர் நாசத்துக்குள்ளாகியிருப்பர். சரியான சமயத்தில் கிடைத்தது, ஆராய்ச்சியாளரின் ஆய்வுரை -- தப்பினர் மக்கள் என்று எழுச்சியுடன் பேசினான் தம்பி -- அண்ணன் அதன் பொருள் விளங்காமல் திகைத்தான். ”தம்பி, என்ன இப்படிப் பேசுகிறாய் -- புரியவில்லையே?" என்று அண்ணன் கேட்க, "ஆர்வத்தால் அடிப்படையை மறந்துவிட்டேன் அண்ணா! மன்னிக்கவேண்டும்" என்ற முன்னுரையுடன், நீர் நிலைய அமைப்பு பற்றிய புதிய முடிவை -- அதாவது அத்தகைய நிலையம் கூடாது -- என்பதை விவரமாக விளக்கினான் தம்பி. அண்ணனுக்குக் கோபம், அருவருப்பு, "முட்டாள்! உன் திட்டங்கள் இப்படித்தான் இருக்கும் என்று நான் அடிக்கடி கூறிக்கொண்டுதானே இருந்தேன், இப்போதாவது புரிகிறதா! ஊர் மக்களுக்கு நன்மை செய்யக் கிளம்பினாய் -- உனக்குத்தான் ஏதோ அந்த உரிமையும் திறமையும் இருப்பதாக எண்ணிக்கொண்டு, வேண்டாமடா, உன் வேலையைக் கவனி -- தொழிலைக் கவனி -- குடும்பத்தைக் கவனி, என்று ஆயிரம் தடவை கூறினேன் -- கொட்டி அளந்தாய் -- இப்போது?" என்று கோபமாகப் பேசினான் அணணன். "ஆர்வ மிகுதியினால் நான் முழு ஆராய்ச்சி செய்யாமலிருந்துவிட்டேன் அண்ணா! ஆபத்து வரஇருந்தது. ஆனால் இப்போது பயம் இல்லையே. நாம், அந்தப்பாதகத் திட்டத்தை நிறுத்தி