பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

19


விடலாம்" என்றான் தம்பி. "இவ்வளவு ஏற்பாடுகள் பூர்த்தியான பிறகா! கட்டடம் அமைக்க 'காண்ட்ராக்ட்டுகள்' ஏற்பாடாகிவிட்டன -- முன் பணம் கொடுத்தாகிவிட்டது. இவ்வளவு ஏற்பாடுகள் நடைபெற்றான பிறகு, திட்டத்தை விட்டுவிடுவது! தம்பி உனக்கு ஏதாவது தெளிவு இருக்கிறதா? என் கோபத்தைக் கிளறாதே. உன் பேச்சை நம்பிக் கொண்டு, நான் நகராட்சி மன்றத்திலே உன் திட்டத்துக்கு ஆதரவு திரட்டினேன் -- எவ்வளவு கஷ்டம் -- எவ்வளவு செலவு!" என்று அண்ணன் கூறி ஆயாசப்பட்டான். "தொந்திரவுதான் கொடுத்துவிட்டேன். கஷ்டம் அதிகம் தான் தங்களுக்கு” என்று ஆறுதல் மொழி கூறினான் தம்பி. "நஷ்டம்! அதை கவனிக்க மறுக்கிறாயே, ஏடுதாங்கி! பணச்செலவு ஆகியிருக்கிறதே தெரியுமா? கவலைப்பட வேண்டாமோ? செலவு செய்த தொகை திரும்பக் கிடைக்கவா போகிறது" என்று வெகுண்டுரைத்தான் அண்ணன்! டாக்டர், "எதற்குச் செலவு?" என்று கேட்டான்; பீறிட்டுக் கொண்டு வந்தது ஆத்திரம் அண்ணனுக்கு. "உன் பைத்தியக்காரத் திட்டத்தை, நகராட்சி மன்றம் ஏற்றுக்கொண்டதே, காரணம் என்ன? உன் திட்டத்திலே அறிவும் அருமையும் ததும்புகிறது என்றா? மடையா? இருபது ஆயிரம் செலவு எனக்கு - -ஆளுக்கு ஆயிரம் -- அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டுதான், 'நகரத் தந்தைகள்' உன் திட்டத்துக்கு ஆதரவுதந்தனர் - தெரியுமா! ஊரிலுள்ள பிரமுகர்களை, உன் திட்டத்துக்கு ஆதரவாளர்களாக்குவதற்கு நான் செலவிட்டது கொஞ்சமலல. உலக அனுபவமற்றவனே! உன் படம் போட்டு, திட்டத்தைப்பற்றிக் கொட்டை எழுத்துக்களிலே அலங்காரமாக அச்சிட்டு வழங்கினார்களே, அது, உன் திட்டத்தைப் பார்த்துப் பூரித்துப் போனவர்கள் செய்த 'பொதுஜன சேவை' என்றுதான், நீ எண்ணிக்