பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மக்கள் தீர்ப்பு


சாலை அமைத்துவிடலாம் -- நீ, சர்ஜன்-ஜெனரல் -- மாதம் ஐயாயிரம் சம்பளம்!"

தம்பியால் இதைக் கேட்கச் சகிக்கவில்லை,

"போ, வெளியே -- போ, வெளியே" -- என்று முழக்க மிட்டான்.

"போகிறேன் —— ஆனால் போவதற்குமுன், இதையும் கூறிவிடுகிறேன். மரியாதையாக, என் யோசனையின்படி நடந்துகொண்டால், தலை தப்பும் - பிடிவாதம் செய்தாயோ அழிவுதான் உனக்கு" என்று எச்சரித்தான் அண்ணன். ”அழிவு யாரால்? உன்போன்ற பணந்தேடி களால்தானே! உன் போன்றாரின் பகை என்னை ஒன்றும் செய்துவிடாது. நான் பொது மக்களின் ஆதரவு பெற்றவன்” என்றான் தம்பி. "பித்தம் பிடித்தவனே! பொதுமக்களே தான் உன்னை எதிர்க்கப்போகிறார்கள் -- எதிர்க்கும்படி, என்னால் ஏவிவிட முடியும். வேண்டாம், விஷப் பரிட்சை. கடைசீ எச்சரிக்கை. தம்பியாயிற்றே,என்ற பாசத்துக்காகக் கூறினேன் -- என் புத்தியைக் கேள் -- பொதுஜன விரோதியாகாதே!!" என்றான் அண்ணன். கோபத்தைப் பிய்ததுக்கொண்டு கிளம்பிற்று சிரிப்பு. "பொதுஜன விரோதி! யார்? நானா! மக்கள் சாகட்டும், பரவாயில்லை, பணம் வேண்டும் எனக்கு என்று பேசும் நீயா, இதைக் கூறுகிறாய்!! நான் பொதுஜன விரோதியா? மக்களின் நலனுக்கு எது தேவை, என்ன செய்யவேண்டும், இந்தத் திட்டம் நல்லதா, இன்னோர் திட்டம் தேவையா, என்று எண்ணியபடி, ஆராய்ச்சிகள் செய்தபடி, அவர்களுக்காக உழைத்தபடி உள்ள நானா, பொதுஜன விரோதி!” என்று ஆத்திரமும் அழுகுரலும் கலந்த முறையில் பேசினான். அண்ணன், பதறாமல், துடிக்காமல், நிதானமாக, "தம்பீ! பொதுஜன விரோதியாகப் போகிறாய் நீ. அதற்