பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

25


தூதியாக அல்ல, உள்ளன்புடனேயே கூறினார். டாக்டர் பூரித்துப் போனார்! பொதுஜன விரோதியாக்குகிறேன் என்று மிரட்டினானே, அண்ணன், என்று எண்ணிப் புன்னகை புரிந்தான். அன்றைய இகழில், முதல் பக்கம், டாக்டரின் கட்டுரை வெளியிடுவது என்று ஆசிரியர் ஏற்பாடு செய்தார்.

பொதுமக்களுக்காக, உண்மையில் தொண்டு செய்பவரை, எந்தப் பகையும் ஒன்றும் செய்துவிடாது, என்ற திட மனதுடன், டாக்டர், பத்திரிகை அலுவலகத்தை விட்டு வெளியேவரப் புறப்பட்டார் -- வெளி வாயற்படியிலே, அண்ணனைக் கணடார். அண்ணன், அலட்சியமாக, டாக்டரைப் பார்த்துவிட்டு, பத்திரிகை நிலையத்துக்குள் சென்றான், ஆசிரியரோ, கட்டுரைக்குப் பொறுத்தமான தலைப்புகள் தயாரிக்கும் தொல்லையான வேலையில் ஈடுபட்டிருந்தார். இரண்டு பேனா பழுதாகிவிட்டன. காகிதம் பல கெட்டுவிட்டன! சீமான் உள்ளே நுழைந்தார் -- கனைத்துக் கொண்டே. ஆசிரியர் டாக்டரின் கட்டுரையைப் புகழத் தொடங்கினார். ஆசிரியர் பேச்சில் குறுக்கிடவில்லை; சீமான் -- பேசி முடிந்ததும், நிதானமாக, "என் தம்பி தந்த கட்டுரையைப் பிரசுரிக்கவேண்டாம். அதைக் கூறிவிட்டுப் போகவே, நான் வந்தேன்" என்றான். ஆசிரியர் திடுக்கிட்டுப் போனார்.

"அதை வெளியிட்டாகவேண்டுமே -- பொதுஜன நன்மையை உத்தேசித்து,"

"பொதுஜன நன்மையை உத்தேசித்துத்தான் நான் கூறுகிறேன், அதை வெளியிடக்கூடாது என்று.”

'மக்களுக்கு விளைய இருக்கும் ஆபத்து இது என்பதை டாக்டர் விளக்கி இருக்கிறார்,"