பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மக்கள் தீர்ப்பு


"என்னிடம் இதைவிட அதிகமாக விளக்கம் கூறினான்,"

"திட்டம் தீமை தருவது என்பதை மக்கள் அறியும்படிச் செய்தால்தானே, திட்டத்தைக் கைவிட்டுவிடுவது பற்றி பொதுமக்கள் தவறாக எண்ணாமலிருப்பர்.”

"ஆமாம், ஆனால் திட்டத்தைக் கைவிட்டுவிடப் போவதில்லை. திட்டப்படி காரியம் நடைபெறும்."

"நச்சுப் பொய்கையை வெட்டப் போகிறீர்களா! இதைத் துணிந்து என்னிடமே கூறுகிறீரே. நான் யார் என்பது தெரியாமல்......"

"நன்றாகத் தெரியும் - ஆசிரியரே! ஆனால் நீர் தெரிந்து கொள்ளவேண்டியது ஒன்று இருக்கிறது. நீர், ஆசிரியர், உரிமையாளரல்ல -- பத்திரிகையின் உரிமையாளருக்கு, திட்டத்தைக் கைவிட்டால், ஐம்பதாயிரம் நஷ்டம் என்பது உமக்குத் தெரியாது."

”தெரியவேண்டிய அவசியமில்லை. அச்சம், தயை தாட்சணியமற்றுச் சேவை செய்வதே, பத்திரிகாசிரியன் கடமை. எது பொதுமக்களின் நன்மைக்கு உகந்தது என்பதைத்தான் நாங்கள் கவனித்துப் பணியாற்றுவோம் -- மற்றவை, எமக்குத் தூசு."

"வேறோர் சமயம், பத்திரிகாசிரியரின் கடமையைப் பற்றி, இதைவிடத் தெளிவாகவும் வீரமாகவும்கூடக் கட்டுரை தீட்டலாம் -- படித்து நானும் இன்புறுகிறேன். இப்போது என் யோசனையைக் கேளும் - என் வேண்டுகோளைச் சற்று மதித்து நடவுங்கள் - தம்பி தந்த கட்டுரையை வெளி யிடவேண்டாம் -- விபரீதம் நேரிடும்."

"உங்கள் வேண்டுகோளின்படி நடப்பதற்கு இல்லை; மன்னிக்கவும்."