பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

27


"பரவாயில்லை. நான் போய் வருகிறேன். என் வேண்டுகோளை நிராகரித்துவிட்டீர்; சரி, உங்கள் சுபாவமே இது தான்! உத்திரவுக்குத்தான் அடங்கி நடக்கப் பிரியம் போலும்!"

ஆசிரியர், இந்தக் கேலிப் பேச்சைக் கேட்டு, கோபம் கொண்டார். சீமான், அதை அறிந்துகொண்டவர்போல வெளியே சென்றார். மடையன், காதகன், கயவன் என்று ஆசிரியர், சீமானை மனதுக்குள் திட்டியபடி, தலைப்பு என்ன தருவது என்று யோசித்தபடி இருந்தார். மணி அடித்தது உரிமையாளர் அறையிலிருந்து -- ஆசிரியர் அழைக்கப் பட்டார். உரிமையாளர் எதிரே, சீமான்!!

”டாக்டர், ஏதோ கட்டுரை அனுப்பினாராமே--”

”ஆமாம் -- மிகவும் முக்கியமான, ஆராய்ச்சி முடிவு”

"சொன்னார்...இவர்...சரி.......அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கவேண்டாம்... இன்று...”

'”என்ன! என்ன! நமது நகர மக்களின் உயிரைப் பாதிக்கக்கூடிய பிரச்னை ..... ஆபத்து நேரிட இருக்கிறது; அதை அறிந்து, டாக்டர் தடுக்கிறார், பல ஆயிரம் மக்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறார் -- அபபடிப்பட்ட கட்டுரையை, ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிடாமலிருப்பதா! உண்மையை மறைப்பதா! நமது பத்திரிகையின் தரம் என்ன! நமது கொள்கை எப்படிப்பட்டது! ஜனநாயக முரசு! இதிலே அக்ரமம், அநீதிக்கு இடமளிக்கலாமா? நான், இதற்கு ஒருபோதும் சம்மதியேன்.

"சம்மதிக்கவேண்டாம், நீ, பத்திரிகை நடத்தும் போது!"