பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

29


வதற்குப் படுகுழி வெட்டப்படுகிறது. என்ன செய்வது!! போரிலே, அண்ணனுக்கு முதல் வெற்றி கிடைத்துவிட்டது. இதழில் வெளியிட்டாலதானா -- மக்களிடம் நேரிலேயே கூறுவோம் -- பிரச்சாரம் சிறந்ததோர் சாதனம் -- திட்டத்தால் வரக்கூடிய தீமையையும் விளக்குவோம்; இதழின் உரிமையாளரும் சீமானும் சேர்ந்து நடத்தும் சதித் திட்டத்தை விளக்குவோம், பொதுமக்களிடம். உண்மையை உணர்ந்ததும், பொதுமக்கள், சீறிக் கிளம்புவர், புல்லர்களின் போக்கைக் கண்டிப்பர், ஆம்! கூட்டம் நடத்தவேண்டும், உடனே என்று எண்ணினார்; உடனே, கூட்டத்திலே, எப்படி எப்படி விஷயத்தை விளக்குவது என்று குறிப்புகள் தயாரித்தார் -- அவர் மனக்கண் முன்பு, பெரியதோர் மன்றம் தெரிந்தது -- மக்கள் திரண்டுள்ளனர் - அவர் பேசுகிறார் - ஆனந்த ஆரவாரம் செய்கின்றனர் மக்கள் -- டாக்டர் வாழ்க! டாக்டர் வாழ்க! என்று பேரொலி கிளம்புகிறது! ஆனால் எல்லாம் மனக்கண்முன்!! டாக்டரின் மனதிலே, உணமையிலேயே, அச்சம் மூண்டது. கூட்டம் நடத்துவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோற்றுப்போனது கண்டு! மண்டபங்கள், கொட்டகைகள், பள்ளிக்கூடங்கள் எங்கும் இடம் கிடைக்கவில்லை - உரிமையாளர்கள், அனுமதி தர மறுத்துவிட்டனர். உண்மையைக் கூற இடம் கிடைக்கவில்லையே! பொதுஜன சேவைக்கு இடம் இல்லையே! இப்படியா நிலைமை இருப்பது என்று எண்ணினார். அடக்க முடியாத கோபம் பிறந்தது.

அண்ணன் வெற்றி பெறுகிறான் -- சூது வெல்கிறதே -- சூழ்ச்சி பலிக்கிறதே -- மககளின் நன்மையைக் கனவிலும் கருதாத மாபாவிகள் வெற்றபெறுகிறார்களே, இதற்கென்ன செய்வது? -- என்று எண்ணி மன மிக வாடினார் -- பித்தம் பிடித்தவர் போலானார்.

***