பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

33


கேட்டு, ஆத்திரம் பிறந்தது. துரோகி ஒழிக! பொதுஜன விரோதி ஒழிக! காட்டிக் கொடுத்தவன் ஒழிக! -- என்று கூவினர் -- காட்டுக் கூச்சல் கிளம்பிவிட்டது கப்பல் தலைவன், கூட்டத்தில் கலகம் செய்பவர்களை அடக்க முயன்றான் -- கலகம் வளர்ந்துவிட்டது -- கைகலப்பு ஏற்பட்டுவிட்டது -- பொதுஜன விரோதி ஒழிக! துரோகி ஒழிக! என்ற கூச்சல் வலுத்துவிட்டது. மேஜை நாற்காலிகள் தூளாயின! கற்கள் பறந்தன -- டாக்டருக்குக் கல்லடி -- இரத்தம் ஒழுகலாயிற்று! மிகுந்த கஷ்டப்பட்டு, கப்பல் தலைவன், அவரை வீடு கொண்டுபோய்ச் சேர்த்தான்.

பொதுஜனமாம் - பொதுஜனம் -- விவரமறியாக் கும்பல் -- விவேகமற்ற கூட்டம் -- தலையாட்டிப் பொம்மைகள் -- காலிப் பாண்டங்கள் -- யார் நண்பன், யார் விரோதி என்பதை அறிந்துகொள்ளமுடியாத சடங்கள் -- என்றெல்லாம் டாக்டர் ஏசினார், வீட்டுக்குள்ளே இருந்தபடி, வேதனையுடன். வெளியே ஆர்ப்பாட்ட ஊர்வலம், பொதுஜன விரோதி ஒழிக -- என்ற கூச்சலுடன். டாக்டர் வீட்டின் மீது கல்மாரி!

போரிலே, புரட்டன் வெற்றிபெற்றான் --உண்மைக்குச் சித்ரவதை! பொதுமக்களின் சேவையை மதித்த டாக்டரிடம் பொதுமக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. மூட்டிய தூபம், அவர்களை வெறியர்களாக்கிற்று உன் பொதுஜனம் எதையும் செய்யும் -- யார் தூண்டிவிட்டாலும் அதற்கு ஏற்றபடி ஆடும், என்று ஆணவக்கார அண்ணன் சொன்னது முற்றிலும் உண்மையாகிவிட்டதே, என்பதை எண்ணினார் டாக்டர்; வேதனையுடன் வெட்கமும் அவரைத் தாக்கிற்று.

செச்சே! இது அறிவிழந்தவர்களின் இருப்பிடம். ஊரைவிட்டே போய்விடலாம், வாருங்கள். எங்கள்