பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தீர்ப்பு

35


இருந்துவந்தார் -- பொதுஜனத்தின் முகத்தையும் பார்க்க விருப்பமின்றி டாக்டர் தன் வேதனையைத் தீர்த்துக்கொள்வதற்காக, அவ்வப்போது, இந்தச் சம்பவத்தின் முழு விவரத்தையும், தன் மருகனிடம் கூறிக்கொண்டிருந்தார் - இதைக் கேட்டுக் கேட்டு, மருமகனுக்கு, புதியதோர் எண்ணம் பிறந்தது -- உண்மையைத் துலங்கச் செய்யவேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

தனக்கும் தன் அண்ணனுக்கும், ஆதியில், 'பொதுஜன சேவை'யைப்பற்றி எழுந்த வாக்குவாதத்தை டாக்டர் கூறுவார் -- அக்கரையுடன் அந்த வாதத்தைக் கேட்பான் மருமகன் -- கேட்டுக் கேட்டு அவனுக்குப் பொதுமக்களிடம் நம்பிக்கை பிறக்கலாயிற்று? பொய்யை அவர்கள் மெய்யென நம்பிவிட்டனர் -- காரணம்? பொய்யர்கள், உண்மை அவர்கள் செவி புகாதபடி செய்த சூழ்ச்சியினால். ஆகவே, தவறு பொதுமக்கள் மீதா! சூழ்ச்சிக்காரரை எதிர்த்தாகவேண்டும் என்ற துணிவு, போதுமான அளவு, டாக்டருக்கு இல்லாததே, இதற்குக் காரணம். பொதுமக்களிடம் உண்மையைக் கூறவேண்டும், சமயமறிந்து -- எதிர்ப்புக்கு அஞ்சாமல் -- என்று தீர்மானித்தான். வெற்றிபெற்ற அண்ணன், நச்சுப் பொய்கையைத் தயாரித்துவிட்டான் -- சீமான்கள் பலருக்கும் கொள்ளை இலாபம் கிடைத்துவிட்டது. திறப்பு விழாவுக்கான நாளும் குறிக்கப்பட்டுவிட்டது.

"இன்னமும் என்ன சந்தேகம்! பொதுமக்கள், மெழுகுப் பொம்மைகளே தான்! இதோ பாரேன், தங்களுக்கு வர இருக்கும் பேராபத்தை உணராமல், இலாப வேட்டைக்காரர்களின் சூது மொழியை நம்பி நாசமாகின்றனர். குதாகலிக்கிறார்களே! கொண்டாட்டமாம், கேளிக்கையாம்! என் அண்ணன் சொன்னது சரியாகப் போய்விட்டது; பொது