பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மக்கள் தீர்ப்பு


னதேகூட, பத்திரிகை உரிமையாளர்தான்! பலர், இந்த விழாவுக்கு, சுகாதார மந்திரியை வரவழைப்பது தான் பொருத்தம் என்றனர். ஆனால், வியாபார மந்திரியிடம் தனியாகப் பேசவேண்டிய விஷயம் ஒன்று இருந்தது, பத்திரிகை உரிமையாளருக்கு!

வியாபார மந்திரி செல்வவான் -- மந்திரி வேலைக்கு முன்பேகூட!! ஒரே மகன் அவருக்கு. ரோஜாவுக்கு ஏற்ற மணாளன். இது சீமானின் பிடிவாதத்துக்குக் காரணம்!! போட்டி - பூசல் முற்றிவிட்டது. புதிய இதழ் வெளிவருவதற்கான ஏற்பாடுகளைச் சீமான் கவனிக்கலானார். இது தெரிந்ததும் பத்திரிகை உரிமையாளர் பதைத்தார். கணையைத் தொடுத்துவிடுவது என்று தீர்மானித்தார். டாக்டரின் பழைய கட்டுரையை - திட்டம் தீதானது - நாசம் தருவது - என்ற கட்டுரையை, வெளியிட்டார், பத்திரிகையில். ஊரிலே ஒரே பரபரப்பு! திகைப்பு!! பல்வேறு வதந்திகள். அச்சுப்பொறி சரியாக அமையவில்லை, சீமானுக்கு. எனவே, கணையைத் தடுக்கும் வழியில்லை.


மறுதினம், சீமானுக்கு ஒரு வேண்டுகோள்!- என்ற கட்டுரை வெளிவந்தது - அதிலே, திட்டம் தீமையானது என்று தெரிந்துவிட்டதால், இனி விழாவேகூடாது, பொதுமக்கள் விவரம் தெரியாமல், குளிக்குமிடம் சென்றுவிடுவதைத் தடுக்க தக்க ஏற்பாடு செய்யவேண்டும்; சீமானுக்கு நஷ்டம் தான் என்றாலும், அவர் அதை, பொதுஜன நன்மையை உத்தேசித்துப் பொருட்படுத்தக்கூடாது, என்று விளக்கமும் உருக்கமும் நிரம்பியவிதமாக எழுதப்பட்டிருந்தது. ஊர்மக்களின் கண்களெல்லாம் சேள்விக்குறிகளாயின! மறுதினம் சீமானின் இதழ் வெளிவந்தது! இத்தனை நாள் ஏன் மறைத்தாய்? - என்ற கட்டுரை, காரசாரமாகத் தீட்டப்பட்