பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மக்கள் தீர்ப்பு


காண்ட்ராக்ட் வேலை-- வட்டித் தொழில் -- வியாபாரம் இவை அண்ணனுக்கு. அவனுக்கோ, பொதுமக்களின் மனப்போக்கிலே, எப்போதும், அவநம்பிக்கை, அவர்களுடைய தீர்ப்பிலே ஒருவகை அலட்சியம். டாக்டர் பொதுமக்களை, ஒரு சக்தி என்று எண்ணினார்! காண்ட்ராக்டர், 'சக்தி' தான், ஆனால், யார் கையிலேயும் சுலபமாகச் சிக்கிக்கொள்ளும் சக்தி அது என்றார். இருவருக்கும் அடிக்கடி இதுபற்றி விவாதம் நடைபெறும். அவ்விதமான உரையாடலிலே ஒன்றுதான், துவக்கத்திலே காணப்படுவது.

***

அவன் இலட்சியவாதி! ஆனால் அவனுக்குக் குடும்பம் இருக்கிறதே! டாக்டர் தொழிலைக் கவனித்தால், குடும்பம் நடக்கும் -- ஆனால், எங்கே கவனிக்கிறான்! -- இது அண்ணன் கூறும் குறை.

பணத்தைக் குவிக்கத்தானே, அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது -- பொதுமக்களின் நலனுக்கு உழைக்க, அவருக்கு, நேரம் ஏது? நினைப்பே கிடையாதே! -- இது தம்பி கூறுவது.

அண்ணன் செல்லும்போது, காணும் மக்கள், அருவருப்பர் -- சிலர் அலட்சியமாகக்கூட இருப்பர் -- வேறு சிலர், பணிவர் -- பாவனைக்கு!

தம்பி, வீதி வழி சென்றாலோ, அனைவரும் வரவேற்பர் - மகிழ்வர் - புகழ்வர் -மதிப்புடன் நடந்துகொள்வார்கள்.

அண்ணன், உள்ளூர் நகரசபையிலே ஒரு அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

தம்பி, அந்த நகரசபையினரால், வைத்தியராக நியமிக்கப்பட்டார்.