பக்கம்:மணி பல்லவம் 1.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

மணிபல்லவம்

கேள்வி அவனுடைய சலனமின்மையைக் கலைத்தது. அவன் ஆச்சரியமடைந்தான்.

“தம்பி! அருட்செல்வ முனிவர் நலமாக இருக்கிறார் அல்லவா?” என்று இருந்தாற்போலிருந்து முன்பின் தொடர்பின்றி அவர் கேட்டபோது இளங்குமரன் திகைத்தான்.

‘முனிவரை இவருக்கு எப்படித் தெரியும்? அப்படியே எந்த வகையிலாவது தெரிந்திருந்தாலும் என்னைக் கண்டவுடனே அதை விசாரிக்காமலிருந்து விட்டு இவ்வளவு நேரம் கழித்து நிதானமாக விசாரிப்பது ஏன்?’ என்று சிந்தித்துக் குழம்பியது அவன் மனம். முனிவரைப் பற்றி விசாரித்துவிட்டு அவர் தன் முகத்தையும் உற்றுப் பார்ப்பதை அவன் காணத் தவறவில்லை.

“என்ன அப்படித் திகைக்கின்றாய் தம்பீ? என்னுடைய முதுமைக்குள் இந்தப் பெருநகரில் எத்தனை கார்காலங்களையும், வேனிற்காலங்களையும் பார்த்திருப்பேன் தெரியுமா? மனிதர்களைப் பார்த்திருக்கவும் பழகியிருக்க வும் முடியாமலா போயிருக்கும்?” என்று மேலும் சொன்னார் அவர்.

பின்னும் அவரிடம் பேச்சை வளர்க்க விரும்பாத இளங்குமரன், “முனிவர் நலமாக இருக்கிறார் ஐயா!” என்று கூறிவிட்டு மேலே நடந்தான். என்ன காரணமோ அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே விருப்பமாயில்லை அவனுக்கு.

“தம்பி! இன்றைக்குத்தான் உனக்கு அவசரம். இன்னொரு நாள் ஓய்வாக இருக்கும்போது இங்கே வந்து ஒருவேளை உண்டு போகவேண்டும்” என்று அவர் கூறியதையும், சுரமஞ்சரியும் வானவல்லியும் தன்னைப் பின் தொடர்ந்து வருவதையும் பொருட்படுத்தாமல் பிரதான வாயிலைக் கடந்து அகலமான வீதியில் இறங்கி நடந்து சென்றான் இளங்குமரன்.

வீதியில் இறங்கும்போது “பல்லக்கு வருகிறது, ஏறிக் கொண்டு போகலாம்” என்று சுரமஞ்சரி கூவிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/101&oldid=1141771" இலிருந்து மீள்விக்கப்பட்டது