பக்கம்:மணி பல்லவம் 1.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

மணிபல்லவம்

நிறத்தினவாய்ப் பல விதத்தினவாய் நீர்ப்பரப்பில் ஒளிக் கோலம் காட்டிக் கொண்டிருந்தன. மேற்கிலிருந்து கிழக்கு முகமாகப் பாய்ந்து கடலோடு கலக்கும் காவிரி பேரொளிக்கோடு போல் நீண்டு தெரிந்தது. காவிரி வாயில் சங்கம முகத்தில் கலங்கரை விளக்கத்துத் தீ செந்நாக்குகளை விரித்து எரித்து கொண்டிருந்தது. தன் மாளிகை நிலாமுற்றத்திலிருந்து காவிரிப்பூம் பட்டினத்தின் அந்தி மாலைக் காட்சி வனப்பை எத்துணையோ முறை கண்டு வியந்திருக்கிறாள் சுரமஞ்சரி. ஆனால் இன்று மாலையில் காணும்போது அந்தக் காட்சி வனப்பில் புதிதாக வியப்பையும், அழகையும் உணரும் ஏதோ ஓர் உற்சாக உணர்வு அவள் உள்ளத்துள்ளே குறுகுறுத்தது. பிணியுற்றுக் கிடந்தவர்களுக்குப் பிறந்தநாள் வந்தது போல் அந்த உற்சாக உணர்வை முழுமையாக அனுபவிக்க முடியாத மனக்குறையும் சிறிது இருந்தது அவளுக்கு. இளங்குமரனை நினைக்கும்போது அவள் மனம் களிப்படைந்து துள்ளியது. அவனுடைய திமிரையும், அவன் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தையும், நினைத்துப் பார்த்தால் அவள் மனம் வாடித் துவண்டது.

சுரமஞ்சரியின் சகோதரி வானவல்லிக்கு ‘வங்கியம்’ எனப்படும் புல்லாங்குழல் வாசிப்பதில் இணையற்ற திறமை உண்டு. அப்போதும் அவள் அதை வாசித்துக் கொண்டுதான் இருந்தாள். அந்த மாளிகையைச் சேர்ந்த மற்றோர் இசையணங்கு மகர யாழிலே இன்னிசை எழுப்பிக் கொண்டிருந்தாள். வேறொருத்தி மத்தளம் வாசித்தாள். நிலா முற்றத்தில் தன்னருகே பரவிப் பாய்ந்து கொண்டிருந்த இந்த இசை வெள்ளத்தில் மூழ்காமல் இளங்குமரனைப் பற்றிய நினைவு வெள்ளத்தில் மூழ்கியிருந்தாள் சுரமஞ்சரி. தந்தத்தில் இழைத்து முத்துப் பதித்த சித்திரக் கட்டிலில் இரத்தினக் கம்பள விரிப்பின் மேல் அமர்ந்து இசை அரங்கு நிகழ்த்திக் கொண்டிருந்தவர்கள், சுரமஞ்சரி தங்கள் இன்னிசையில் ஆழ்ந்து மூழ்கி அநுபவித்துக் கொண்டுதான் எதிரே அமர்ந்திருக்கிறா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/105&oldid=1141775" இலிருந்து மீள்விக்கப்பட்டது