பக்கம்:மணி பல்லவம் 1.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

105

ளென நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுரமஞ்சரியின் இதயத்தை யாழாக்கி அதன் மெல்லிய உணர்வு நரம்புகளில் இளங்குமரன் என்னும் எழில் நினைவு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை. ‘வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவது போல்’ தண்மதிக் கதிர் பரவும் நிலா முற்றத்தில், உடலை வருடிச் செல்லும் இதமான காற்றும் வீசும் நிலையில் சுரமஞ்சரி நினைக்கலானாள்.

‘இந்திரவிழாக் காலத்தில் இந்த மாளிகைக்கு வந்தவர்களை விருந்துண்ணச் செய்யாமல் அனுப்பும் வழக்கமில்லை. மாளிகைக்கு வந்து உணவை முடித்துக் கொண்டு போகலாம் என்று எவ்வளவு அன்போடும், ஆர்வத்தோடும் அவரை அழைத்தேன்! ‘நான் இந்த மாளிகைக்கு விருந்து உண்ண வரவில்லை’ என்று சிறிதும் தயங்காமல் முகத்தில் அறைந்தாற்போல் பதில் கூறிவிட்டாரே, அதுதான் போகட்டும்! தந்தையார் ஏன் அப்படி மரங்களின் மறைவில் ஒளிந்தாற்போல் நின்று அவரையும் எங்களையும் கவனித்தார்? திடீரென்று மறைவிலிருந்து வெளிப்பட்டு, ‘இந்தப் பிள்ளையை நான் இதற்கு முன்பு எங்கோ பார்த்தாற்போல் நினைவிருக்கிறதம்மா’ என்று கூறி எங்களையும் அவரையும் திகைப்படையச் செய்ததுமல்லாமல் அவரருகில் சென்று அநாகரிகமாக அவரை உற்று உற்றுப் பார்த்தாரே தந்தையார்? அதன் நோக்கமென்ன? எவ்வளவோ உலகியலறிவும், நாகரிகமும் தெரிந்த தந்தையார் இன்று தோட்டத்தில் ஏன் அப்படி நடந்து கொண்டார்? தந்தையாரின் எதிர்பாராத வருகையும், பேச்சும், உற்றுப் பார்த்த பார்வையும் அவருக்கு அநாகரிகமாகத்தான் தோன்றியிருக்கும். இல்லாவிட்டால், நடந்து போகாதீர்கள். பல்லக்கு வருகிறது. அதில் ஏறிக்கொண்டு போகலாம் என்று நான் கூவிய போது திரும்பியும் பார்க்காமல் அலட்சியமாக வீதியில் இறங்கி நடந்திருப்பாரா அவர்? நல்ல வேளை! நான் அப்போது காட்டிய குறிப்பைப் புரிந்து கொண்டு என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/106&oldid=1141776" இலிருந்து மீள்விக்கப்பட்டது