பக்கம்:மணி பல்லவம் 1.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

107

மாளிகைகள் போல் வசதிகள் நிறைந்தவை. நோக்குமிடமெல்லாம் சித்திரங்கள், நுகருமிடமெல்லாம் நறுமணங்கள், அமர விரும்புமிடமெல்லாம் பட்டுவிரித்த மஞ்சங்கள். பஞ்சணைகள், பாங்கான இருக்கைகள், எல்லாம் எல்லா இடங்களிலும் பொருந்திய பெருமாளிகை அது. அந்தி நேரங்கழிந்து இரவு தொடங்கிவிட்டதாக வண்ண வண்ண விளக்குகள் வேறு மாளிகையை ஒளிமயமாக்கியிருந்தன. எழுநிலை மாடங்களில் கீழிருந்து மூன்றாவதாக அமைந்த மாடமும் அதைச் சார்ந்த அறைகளும் சுரமஞ்சரியின் பழக்கத்துக்கென அவள் தந்தையாரால் விடப்பட்டிருந்தன. ‘இளங்குமரனைப் பின்தொடர்ந்து சென்றிருந்த வசந்த மாலை திரும்பி வந்திருந்தால் இந்த மூன்றாவது மாடத்துக்குள்தான் எங்கேயாவது இருப்பாள்’ என்பது சுரமஞ்சரிக்குத் தெரியும். அன்று பிற்பகலில் ஓவியனிடம் வரைந்து வாங்கிய இளங்குமரனின் ஓவியத்தை இந்த மூன்றாவது மாடத்துக்குள் அமைந்திருந்த சித்திரசாலையில் தான் சுரமஞ்சரி வைத்திருந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சிறந்த ஓவியர்களிடமிருந்தும், இந்திர விழாக் காலங்களில் பல தேசங்களிலிருந்தும் வகை வகையான அபூர்வ ஓவியங்களையெல்லாம் வாங்கித் தனது சித்திர சாலையில் சேர்த்து வைத்திருந்தாள் சுரமஞ்சரி. அவளுடைய சித்திரச்சாலையை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும் ஓவியங்களில் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டுவிடலாம்.

‘தோழி வசந்தமாலை இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லையானால் நமது சித்திரசாலையில் போய் அவருடைய ஓவியத்தின் அழகை ஆர்வம் தீரக் கண்டு கொண்டே சிறிது நேரத்தைக் கழிக்கலாம்’ என்ற எண்ணத்தோடு மூன்றாவது மாடத்துக்குள் நுழைந்தாள் சுரமஞ்சரி. தனக்குச் சொந்தமான அந்த மூன்றாவது அடுக்கு மாளிகையை மிக அலங்காரமாக வைத்துக் கொண்டிருந்தாள் அவள். மாளிகையின் முன் கூடத்தில் யாரும் இல்லாததால் வசந்தமாலை இன்னும் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/108&oldid=1141778" இலிருந்து மீள்விக்கப்பட்டது