பக்கம்:மணி பல்லவம் 1.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

மணிபல்லவம்

உண்டாக்கியிருந்தன. அந்தக் கலக்கத்தினால்தான் போகும்போது இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருந்த தன் மகள் முல்லை திரும்பி நாளங்காடியிலிருந்து எவர் துணையுமின்றித் தனியே வந்ததைக்கூட அவர் கவனித்துக் கோபம் கொள்ளவில்லை. இல்லாவிட்டால் அவளைத் தனியே அனுப்பி விட்டு எங்கோ போனதற்காக இளங்குமரனைப் பற்றி வாய் ஓய்வடையும் வரை வசைபாடித் தீர்த்திருப்பார் அவர்.

நாளங்காடியிலிருந்து முல்லை திரும்பி வந்து வீட்டுப் படி ஏறியபோது அவருடைய சிந்தனையாற்றல் முழுதும் ‘முனிவர் எதற்காக என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று இங்கிருந்து கிளம்பிப் போனார்? அதுவும் ஏதோ சிறைப்படுத்தப்பட்டிருந்தவன் தப்பி ஓடிப் போகிறதுபோல் பின்புறத்து வழியாகத் தப்பிப் போக வேண்டிய அவசியமென்ன?’ என்னும் வினாக்களுக்கு விடை காண்பதில் ஈடுபட்டிருந்தது.

அருட்செல்வ முனிவர் தம் இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்றதற்குக் காரணத்தை அவரால் உறுதியாகத் தீர்மானம் செய்ய முடியவில்லையே தவிர ‘இன்ன காரணமாகத்தான் இருக்கலாம்’ என்று ஒருவாறு அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப் பற்றி ஏதாவது தூண்டிக் கேட்க ஆரம்பித்தாலே அவர் பயப்படுகிறார். அதில் ஏதோ ஒரு பெரிய மர்மமும், இரகசியமும் இருக்கும்போல் தோன்றுகிறது. இன்றைக்கு நான் அவரிடம் இளங்குமரனைப் பற்றிய பேச்சைத் தொடங்கியிராவிட்டால், இப்படி நேர்ந்திருக்காது. அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர் முகம்தான் எப்படி, மாறிற்று! ‘சில நிகழ்ச்சிகளை இதயத்துக்குள்ளேயே இரண்டாம் முறையாக நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அச்சமாக இருக்கிறதே, வெளியே எப்படி வாய்விட்டுக் கூறமுடியும்?’ என்று பதில் கூறும் போது முனிவரின் குரலில்தான் எவ்வளவு பீதி? எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/111&oldid=1141781" இலிருந்து மீள்விக்கப்பட்டது