பக்கம்:மணி பல்லவம் 1.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

111

நடுக்கம்?’ என்று நிகழ்ந்தவற்றைக் கோவையாக மீண்டும் சிந்தித்துப் பார்த்தார் வளநாடுடையார். இளங்குமரனைப் பற்றி முனிவரிடம் விசாரிக்க நேர்ந்த போதெல்லாம் பலமுறைகள் இது போன்ற அனுபவங்களையே அடைத்திருக்கிறார் அவர்.

“இப்படியே முனிவரைக் காணவில்லை என்று பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன செய்வது அப்பா? தேடுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டாமா? இன்னும் சிறிது நேரத்தில் அண்ணனும் முனிவருடைய வளர்ப்புப் பிள்ளையாகிய அவரும் இங்கே வந்துவிடுவார்களே? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?” என்று முல்லை கேள்வி கேட்ட போதுதான் வளநாடுடையாருக்கும் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தது.

முனிவரைப் பற்றி முல்லை தன் மனத்துக்கு மட்டும் தெரிந்த உண்மை ஒன்றைத் தந்தையிடம் சொல்ல விரும்பவில்லை. அதுபோலவே தனிமையில் முனிவரிடம் தாம் கேட்ட கேள்விகளைப் பற்றியும் முனிவர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல அந்தக் கேள்விகளும் ஓரளவு காரணமாயிருக்கலாம் என்பதைப் பற்றியும்— தந்தை மகளிடம் சொல்லவில்லை. முதல் நாள் நள்ளிரவில் முனிவருக்கும் இளங்குமரனுக்கும் நிகழ்ந்த உருக்கமான உரையாடலையும், அந்த உரையாடலின்போது முனிவர் துயரம் தாங்காமல் அழுததையும் அறிந்திருந்த முல்லை தன் தந்தையாரிடம் அவற்றைக் கூறியிருப்பாளாயின் அவருக்கு அவற்றைக் கொண்டு முனிவர்மேல் இன்னும் சில சந்தேகங்கள் கொள்ள இடம் கிடைத்திருக்கும். அதே போல் முனிவரிடம் தாம் தனிமையில் பேசிய பேச்சுக்களை வளநாடுடையார் தம் மகளிடம் கூறியிருந்தால் அவளுக்கு முனிவர் ஏன் ஓடிப்போனார் என்ற சந்தேகம் தீர்ந்து போயிருக்கும். இரண்டு காரியங்களுமே அப்படி நிகழாததனால் சந்தேகங்களும் குழப்பங்களும் இன்னும் அதிகமாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/112&oldid=1141782" இலிருந்து மீள்விக்கப்பட்டது