பக்கம்:மணி பல்லவம் 1.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

மணிபல்லவம்

அதற்குள் நீயே எதிரே வந்துவிட்டாய். உன்னிடம் அவசரமாகப் பேச வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன” என்று பேச்சைத் தொடங்கினான் கதக் கண்ணன். அதைக் கேட்டு இளங்குமரன் சிரித்துச் சொல்லலானான்.

“நான் தெய்வமும் இல்லை; நீங்கள் என்னைக் கும்பிடுவதற்கரகத் தேடிவரவும் இல்லை. நான் மட்டும் தெய்வமாயிருந்தால் இந்தப் பட்டினப்பாக்கம் என்னும் அகநகரத்தை இப்படியே அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்க் கிழக்கே கடலில் மூழ்கச் செய்து விடுவேன். இங்கே பெரிய மாளிகைகளின் அகன்ற இடங்களில் சிறிய மனிதர்கள் குறுகிய மனங்களோடு வாழ்கிறார்கள். இவர்கள் பார்வை, பேச்சு, நினைவு, செயல் எல்லாவற்றிலும் சூழ்ச்சி கலந்திருக்கிறது; சூது நிறைந்திருக்கிறது.”

ஆத்திரத்தோடு இவ்வாறு கூறிக்கொண்டே பின் புறம் திரும்பி, யாருடைய வரவையோ எதிர்பார்க்கிறாற் போல் நோக்கினான் இளங்குமரன். ஆனால் பின்புறம் ஒன்றன் பின் ஒன்றாக வீதியைக் கடந்து சென்று கொண்டிருந்த இரண்டு மூன்று தேர்களின் தோற்றம் அவன் பார்வையை அப்பால் சென்று காண முடியாமல் தடுத்துவிட்டது. கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் இளங்குமரனின் பார்வை யாரைத் தேடி ஆத்திரத்தோடு அவ்வாறு பின்புறம் திரும்புகிறதென்று தெரியாமல் மயங்கினர். அப்போது, “வா அப்பனே! நன்றாகப் பின் தொடர்ந்து வா. ஒரு கண்ணோடு இன்னொரு கண்ணையும் பொட்டையாக்கி முழுக்குருடனாகத் திருப்பி அனுப்பி வைக்கிறேன்” என்று பின்புறம் திரும்பி நோக்கியவாறே இளங்குமரன் மெல்லக் கறுவிக்கொண்டு முணுமுணுத்த சொற்களை அவனுக்கு மிகவும், அருகில் நின்ற கதக்கண்ணன் கேட்க முடிந்தது. பட்டினப்பாக்கத்தில் இளங்குமரனுக்கு ஆத்திரமூட்டக்கூடிய அனுபவங்கள் எவையேனும் ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கதக்கண்ணன் நினைத்துக் கொண்டான். இளங்குமரனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/117&oldid=1141787" இலிருந்து மீள்விக்கப்பட்டது